Slider

காணொளிகள்

மன்னார் செய்திகள்

விம்பம்

உள்நாட்டு செய்திகள்

சர்வதேச செய்திகள்

கட்டுரைகள்

பல்சுவை

கல்வித்தளம்

மருத்துவம்

புகைப்படத்தளம்

சினிமா

கசகசா,,,,,,,,வெளிநாடுகளுக்கு எடுத்துச் செல்ல தடை ஏன் ?


கசகசா... ஊர் கடைகளில் சர்வசாதாரணமாக கிடைக்கும் உணவுப்பொருள். ஆனால், இதை வெளிநாடுகளுக்கு எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக வளைகுடா நாடுகள் கசகசாவுடன் வருபவர்களுக்கு கடுமையான தண்டனையை கொடுத்து வருகிறது.

சொந்த ஊரில் இருந்தவரை, மணக்க, மணக்க மசாலாவுடன் சாப்பிட்டு பழகிய நம்ம ஊர் இளைஞர்கள், வளைகுடா நாடுகளுக்கு வேலைக்குச் செல்லும்போது, ஊறுகாய் பாட்டில்களுடன், கசகசாவையும் எடுத்துச் சென்றதற்காக தண்டனை விதிக்கப்பட்ட சம்பவமும் நடந்துள்ளது.

இப்படி தண்டனைக் கொடுக்கும் அளவுக்கு, என்னதான் கசகசாவில் இருக்கிறது என்று ஆராய்ந்து பார்ப்போம்.

இந்திய உணவுகளில் கசகசாவுக்கு தனி இடம் உண்டு. இந்தி மொழியில் 'கஸ்கஸ்' என்று அழைக்கப்படுகிறது. இது உணவுப் பொருள் மட்டுமல்ல, மருத்துவ குணங்கள் நிறைந்த மூலிகையும் கூட. கால்சியம், பொட்டாசியம், மக்னீசியம் மற்றும் இரும்பு போன்ற கனிமங்களை நிறைய அளவு பெற்றிருக்கின்றன. ‘கசகசாவினால் குடற்புழு, தினவு, குருதிக் கழிச்சல், தலைக்கனம், தூக்கமின்மை போகும். அழகும் ஆண்மையும் கூடும்’ என்கிறது சித்தர் பாடல்.

காரசாரமான மட்டன், சிக்கன் குழம்பு மற்றும் பிரியாணி போன்ற அசைவ உணவுகளில் ருசியைக் கூட்ட கசகசா சேர்க்கப்படுகிறது. மேற்குலக நாடுகளிலும் ‘பாப்பி விதை’ (POPPY SEED) என்று அழைக்கப்படும் கசகசாவுக்கு சிறப்பான மரியாதை உண்டு. பாப்பி மலர்கள் அலங்காரத்துக்காக பல்வேறு நாடுகளில் பயன்படுத்தப்படுகின்றன.

இந்த பாப்பிச் செடியில் விதைகளை தாங்கியிருக்கும் பை முற்றி, அது முழுவதுமாகக் காய்ந்த பிறகு அதிலிருந்து எடுக்கப்படுவதுதான் கசகசா. ஆனால், விதைப் பை பசுமை நிறத்தில் இருக்கும் போது, அதாவது பையில் இருக்கும் விதைகள் முழுமை அடையாமல் இருக்கும் சமயத்தில், அந்த விதைப்பையைக் கீறி அதிலிருந்து வடிகிற பாலை சேகரித்தால் அதுதான் ஓபியம்.

மதுபானம், புகையிலை, அபின், ஹெராயின், கஞ்சா, கோக்கைன், பிரவுன் சுகர் போன்று ஓபியமும் போதை தரக்கூடியது. போதைபொருள் பழக்கம் உடல் நலத்திற்கும், சமூக நலத்திற்கும் பெரும் கேடு விளைவிக்கும். இதனால் வளைகுடா நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ளது. கசகசாவில் போதை இல்லை என்றாலும், ஓபியம் தயாரிக்கப்படும் செடியின் விதை என்பதால், தடை செய்துள்ளார்கள். காரணம், இந்த விதையை விதைத்து, கசகசா செடியை வளர்த்து ஓபியம் எடுத்துவிட முடியும். அதனால்தான், கசகசாவுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

கசகசா இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் பயிரிடப்படுகிறது. கசகசாவுக்காக பயிர் செய்யப்படும் செடிகளிலிருந்து சட்ட விரோதமாக ஓபியம் எடுப்பதும் நடக்கிறது.

இந்தியாவை பொறுத்தவரை கசகசா போதைப் பொருள் தடுப்புச் சட்டத்தின் கீழ் வரவில்லை. என்றாலும், இந்திய அரசின் நீதித்துறை, வருவாய்த்துறை மற்றும் சுங்க இலாகா இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்கு கசகசாவை உரிய அனுமதியின்றி எடுத்துச் செல்ல தடை உத்தரவு போடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கடலில் மிதந்து வந்த போத்தலை உடைத்து குடித்த தந்தை மரணம்


கணவரை சாப்பிட வருமாறு அழைத்தேன். அதற்கு அவர் சாப்பாடு வேண்டாம் என்றும் வயிறு எரிவதுடன் தலைசுற்றுவதாகவும் கூறி உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லுமாறு சொன்னார். உடனே களுவாஞ்சிக்குடி வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றோம். அங்கிருந்து அவர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். எனினும் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார்.


இவ்வாறு மு. குணசுந்தரி அவரின் சாட்சியத்தில் கூறினார். களுதாவளையைச் சேர்ந்த ஐந்து பிள்ளைகளின் தந்தையான க. கணேசலிங்கம் (வயது 51) என்பவரின் மரண விசாரணை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் நடைபெற்றது. மண்டூர் திடீர் மரண விசாரணை அதிகாரி த. காராளசிங்கத்தினால் நடத்தப்பட்ட மரண விசாரணையில் சாட்சி மேலும் கூறியதாவது

இறந்தவர் எனது கணவர். கூலி வேலை செய்வதுடன் கடற்கரைக்கும் சென்று வலை இழுப்பார். வழமை போன்று கடற்கரைக்கு சென்றவர் கையில் ஒரு போத்தலும் மீனும் கொண்டு வந்தார். போத்தல் ஏது என்று கேட்டேன். கடலில் ஒரு போத்தல் மிதந்து வந்தது என்றும் அதனை எடுத்து பார்த்த போது சாராய வாடை வீசியதாகவும் பின்னர் தான் அதனை குடித்ததாகவும் கூறினார்.

பின்பு நான் உணவு சமைத்தேன். சாராயம் நல்ல போதையை தருவதாக கூறி மீண்டும் குடித்தார். அதனைக் குடித்த பின்னரே அவருக்கு வயிறு எரிவு ஏற்பட்டது. இவ்வாறு குணசுந்தரி அவரின் சாட்சியத்தில் கூறினார்.

இறந்தவரின் பிரேதம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் ஏ.எஸ். ஆர். விக்கிரமாராய்ச்சியினால் பரிசோதனை செய்யப்பட்டது. இறந்ததற்கான காரணம் கண்டறியப்பட முடியாமல் இருப்பதாக அவரால் அறிக்கை செய்யப்பட்டது. உடல் உள்ளுறுப்புக்களை இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்துக்கு அனுப்புமாறும் மரணத்துக்குரிய காரணம் அறிய முடியாமல் இருப்பதாகவும் தீர்ப்பு வழங்கிய மரண விசாரணை அதிகாரி காரளசிங்கம் சடலத்தை மனைவியிடம் ஒப்படைத்தார்.

வடமராட்சி கடலில் கரையொதுங்கிய மர்மப்பொருள்


வடமராட்சி கிழக்கு, உடுத்துறை கடற்பரப்பில் இன்று காலை மஞ்சள் நிறத்திலான மர்மப் பொருளொன்று கரையொதுங்கியுள்ளது.

இதனை அவதானித்த பலர் பதற்றத்துடனும் பரபரப்புடனும் காணப்பட்டனர்.

இதனையடுத்த அப்பகுதியில் பொதுமக்கள் கூடி அதனை வேடிக்கை பார்ததனர்.

அத்துடன் இதுகுறித்து பொலிஸாருக்கும் இராணுவத்தினருக்கும் தகவல் கொடுக்கப்பட்டதையடுத்து, அங்கு வந்த அவர்கள் அந்தப் பொருளை பார்வையிட்டு சென்றனர்.

குறித்த பொருள் சர்வதேச கடல் எல்லைகளை அடையாளமிடுவதற்காகப் பயன்படுத்தப்படும் மிதவையென தெரிவிக்கப்படுகிறது.

​22 ஆவது மாடியிலிருந்து கீழே வீழ்ந்த குழந்தை மரணம்


கொழும்பு வெள்ளவத்தை பகுதியிலுள்ள தொடர்மாடிக் கட்டடத்தின் 22 ஆவது மாடியிலிருந்து கீழே விழுந்து 4 வயது குழந்தை உயிரிழந்துள்ளது.

நேற்றிரவு 7.22 அளவில் குழந்தை மாடியிலிருந்து விழுந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குழந்தை களுபோவில போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டதை அடுத்து வெள்ளவத்தை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

குழந்தையின் சடலம் களுபோவில வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் பிரேத பரிசோதனைகள் இன்று முன்னெடுக்ப்படவுள்ளன.

இந்திய குடியரசு தலைவர் மாளிகையில் ஒபாமாவிற்கு செங்கம்பள வரவேற்பு


மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு, இந்தியாவிற்கு விஜயம் செய்துள்ள அமெரிக்க ஜனாதிபதிக்கு, குடியரசு தலைவர் மாளிகையில் செங்கம்பள வரவேற்பளிக்கப்பட்டுள்ளது.

இன்று காலை டெல்லியை சென்றடைந்துள்ள அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவும் அவரது பாரியாரும், இந்திய பிரதமர் நரேந்திர மோடியால் வரவேற்கப்பட்டனர்.

இன்று மாலை பராக் ஒபாமாவும் பிரதமர் நரேந்திர மோடியும் ஹைதராபாத்தில் முக்கிய பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு, சர்வதேச தீவிரவாதம், இருதரப்பு வர்த்தகம், அணுசக்தி உடன்பாடு, காலநிலை மாற்றம், பாகிஸ்தான் தீவிரவாதிகள் விவகாரம் உட்பட பல்வேறு விடயங்கள் குறித்து இரு தலைவர்களும் விரிவாக ஆலோசனை நடத்துவுள்ளனர்.

அதன் பின்னர் இருவரும் இணைந்து ஊடக சந்திப்பொன்றில் கலந்துகொள்ளவுள்ளதுடன் அதன்போது சில முக்கிய அறிவிப்புக்கள் வௌியிடப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது

1000 படங்களுக்கு மேல் நடித்த பழம்பெரும் நடிகர் வி.எஸ் ராகவன் மறைவு


தென்னிந்தியாவின் புகழ்பூத்த பழம்பெரும் நடிகர் வி.எஸ்.ராகவன் உடல்நலக் குறைவால் இன்று காலமானார்.

அவர் வயிற்றுப் புற்றுநோய் காரணமாக தி.நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் சிகிச்சைப் பலன் இன்றி இன்று மாலை உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

1925ம் ஆண்டு காஞ்சிபுரம் மாவட்டம் வெம்பாக்கத்தில் பிறந்தவர் வி.எஸ்.ராகவன். 1954-ஆம் ஆண்டு வெளிவந்த வைரமாலை என்ற தமிழ்ப்படத்தில் முதன்முறையாக அறிமுகம் ஆனார்.

முதலில் நாடகத்திலும் பிறகு சினிமாவிலும் தொடர்ந்து பல ஆண்டுகளாக நடித்து வந்த வி.எஸ்.ராகவன் எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜினி, கமல் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்களுடன் நடித்துள்ளார்.

1000க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள வி.எஸ்.ராகவன் ஆல் இன் ஆல் அழகுராஜா, கலகலப்பு, இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா ஆகிய படங்களிலும் நடித்துள்ளார்.

சாகும் வரையிலும் நடித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்பதே வி.எஸ்.ராகவனின் ஆசையாக இருந்தது. இவர் கடைசியாக நடித்த காத்தாடி திரைப்படம் இன்னும் வெளிவரவில்லை.

இந்நிலையில், உடல் நலக் குறைவால் வி.எஸ்.ராகவன் காலமானார்.

இவரின் பூதவுடலுக்கு திரையுலகினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

மறைந்த பழம்பெரும் நடிகரின் இறுதிச் சடங்கு பெசன்ட் நகர் மயானத்தில் நாளை நடைபெறவுள்ளது.


அமெரிக்க அப்பிள் பழங்களில் லிஸ்ரியா மொனொசைடொஜெனஸ் பக்றீரியா - சுகாதார அமைச்சு எச்சரிக்கை


அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அப்பிள் பழங்களில் உடலுக்கு பாதிப்பை தரக்கூடிய பக்றீரியா கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக இலங்கையின் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

எனவே அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அப்பிளகளை நுகர்வது தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த பக்றீரியா, லிஸ்ரியா மொனொசைடொஜெனஸ் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது.

இந்த பக்றீரியாவினால் பாரிய தொற்றுநோய்கள் ஏற்படலாம் என்றும் சுகாதார அமைச்சு எச்சரித்துள்ளது.

பாடசாலை அதிபர்களுக்கு வழங்கப்பட்டுள்ள கெர்னல் பதவியை நீக்கத் தீர்மானம்


தேசிய பாடசாலைகளின் அதிபர்களுக்கு வழங்கப்பட்டுள்ள கெர்னல் பதவியை நீக்குவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

கெர்னல் பதவி அதிபர்களுக்கு அவசியமற்றது என அமைச்சரவையில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக, கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார்.

கடந்த அரசாங்கத்தினூடாக அதிபர்களுக்கு கெர்னல் பதவி வழங்கப்பட்டதாகவும், அப்போதைய எதிர்க்கட்சி தொடர்ந்தும் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்ததாகவும் கல்வி அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

இதனிடையே, அரசியல் செல்வாக்கினால், வழங்கப்பட்டுள்ள ஆசிரியர் இடமாற்றங்களையும் இரத்து செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, அமைச்சினால் புதிய ஆசிரியர் இடமாற்றக் குழுவொன்று நியமிக்கப்பட்டு, உரிய வகையில் இடமாற்றங்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் சுட்டிக்காட்டினார்.

மன்னார் மாவட்ட சைவக்கலை இலக்கிய மன்றம் நடாத்தும் பாரதி விழா - 2015

மன்னார் மாவட்ட சைவக்கலை இலக்கிய மன்றம் பெருமையுடன் நடாத்தும் பாரதி விழா  இன்று  25.1.2015 காலை 9.15 மணிக்கு மன்னார் நகரசபை மண்டபத்தில் ப்ரம்ம ஸ்ரீ மஹா தர்ம குமார சர்மா அவர்களின் தலைமையில் ஆராம்பமாகின்றது.

புதிய முறையில் தேர்தலை நடத்த மூன்று மாதகால அவகாசம் தேவை: தேர்தல்கள் ஆணையாளர்

புதிய முறையின் கீழ் தேர்தல் நடத்துவதனால் எமக்கு 3 மாத கால அவகாசம் தேவை என தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.

தற்போதைய பாராளுமன்றத்தின் பதவிக்காலம் 2016 ஏப்ரல் மாதமே நிறைவடைகிற போதும் ஜனாதிபதிக்கு எந்த நிமிடமும் தேர்தல் நடத்த முடியும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

புதிய தேர்தல் முறைமை குறித்து சகல தரப்பினருடனும் ஆராய்ந்து முன்னெடுக்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்ட அவர் கட்அவுட் சுவரொட்டி இல்லாத தேர்தல் நடப்பதையேதான் விரும்புவதாகவும் கூறினார்.

இது குறித்து மேலும் கருத்துத் தெரிவித்த அவர்,

தினேஷ் குணவர்த்தன தலைமையிலான குழு தயாரித்த புதிய தேர்தல் சட்ட முறைமையை நான் இதுவரை காணவில்லை. அதில் கலப்பு முறை குறித்து பிரேரிக்கப்பட்டுள்ளதாக அறிகிறேன்.

தேர்தல் சட்டத்தை மாற்றும் அதிகாரம் எமக்கு கிடையாது. எம்மிடம் வினவினால் தேவையான யோசனைகள் வழங்க முடியும். எல்லை நிர்ணய ஆணைக் குழுவினூடாக எல்லை அமைத்து பாராளுமன்றத்தினூடாக சட்டம் நிறைவேற்றப் பட வேண்டும்.

கடைசியாக நியமித்த எல்லை நிர்ணய ஆணைக்குழு, குலம், மதம் மற்றும் இன அடிப்படையில் எல்லைகள் பிரிக்கத் தேவையில்லை என பரிந்துரை செய்துள்ளது.

தேர்தல் சட்ட திருத்தத்தில் தேர்தல் நடத்தும் அதிகாரம் தேர்தல் திணைக்களத்துக்கு வழங்கப்படுவதை வரவேற்கிறோம். எல்லை நிர்ணய சட்டத்தின் படி 36 ஆசனங்கள் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் பிரித்து வழங்கப்பட்டுள்ளது. எஞ்சிய 160 ஆசனங்கள் நாடு பூராவுமுள்ள பதிவு செய்யப்பட்ட வாக்காளர் தொகையின் பிரகாரம் மாவட்ட மட்டத்தில் பிரித்து வழங்கப்படுகிறது.

ஒவ்வொருவரிடமும் இந்த மாற்றம் முன்னெடுக்கப்படுகிறது. இதன்படி 2013 உடன் ஒப்பிடுகையில் மாத்தறை மாவட்டத்திற்கான ஆசன தொகை 7 இல் இருந்து 8 ஆகவும் யாழ்ப்பாணத்துக்கான ஆசன தொகை 6 இல் இருந்து 7 ஆகவும் அதிகரித்துள்ளன. பதுளை மற்றும் மொனராகல மாவட்டங்களுக்கான ஆசன தொகை தலா ஒன்றினால் குறைந்துள்ளது.

ஏனைய மாவட்டங்களில் எதுவித மாற்றமும் கிடையாது. வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ளடக்கப்படாத சுமார் 10 ஆயிரம் வாக்காளர்களின் பெயர்களை குறைநிரப்பு வாக்காளர் பட்டியல் (Supplementary list) அமைத்து உள்வாங்குவது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இதுதவிர அத்தியாவசிய சேவையில் ஈடுபட்டுள்ள அரச உத்தியோகத்தர்கள், தேர்தல் கண்காணிப்பு உத்தியோகத்தர்கள், அரசியல் செயற்பாட்டாளர்கள், ஊடகவியலாளர்கள் போன்றோருக்கு வேறு இடத்தில் வாக்களிக்க அனுமதி வழங்குவது குறித்தும் ஆராயப்பட்டு வருகிறது. கட்சித் தலைவர்களுடனான சந்திப்பின் பின்னர் இது குறித்து முடிவு செய்யப்படும் என குறிப்பிட்டுள்ளார்.

Photos