Slider

காணொளிகள்

மன்னார் செய்திகள்

விம்பம்

உள்நாட்டு செய்திகள்

சர்வதேச செய்திகள்

பல்சுவை

School events

கல்வித்தளம்

மருத்துவம்

புகைப்படத்தளம்

கட்டுரைகள்

சினிமா

மின்சாரம் தாக்கிவிட்டதா? உயிரை காப்பாற்ற உடனடியாக இதை செய்திடுங்கள்....


நமது வீட்டின் சமையல் அறையில் ஆரம்பித்து குளியல் அறை வரையிலும் மின்சாரத்தில் இயங்கும் உபயோகப் பொருட்கள் தான் அதிகமாக பயன்படுகிறது.

மின்சாரத்தின் தாக்கம் என்பது எத்தனை அளவு வோல்ட்டேஜ் உள்ளது என்பதைப் பொருத்தும், நமது உடலில் பாயும் மின்சாரத்தின் மின்தடை திறனை வைத்தும் தான் ஆபத்துக்கள் அமைகிறது.

ஆனால் குளியல் மற்றும் சமையல் இது போன்ற ஈரத்தன்மை அதிகமாக இருக்கும் அறைகளில் மின்சாரம் தாக்கினால் அது உயிருக்கு ஆபத்தாகும். ஏனெனில் ஈரத்தில் மின்சாரத்தின் திறன் அதிகமாக இருக்கும்.

எனவே மின்சார விபத்துகளில் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும்போது நன்றாக யோசித்து, மின்னல் வேகத்தில் செயல்பட வேண்டும்.மின்சாரம் தாக்கியவருக்கு முதலுதவி செய்வது எப்படி?

  • மின்சாரத் தாக்குதலுக்கு உள்ளானவர் மின் கம்பியைத் தொட்டுக் கொண்டு இருந்தால், முதலில் கையில் ரப்பர் கை உறையை அணிந்துக் கொண்டு மெயின் சுவிட்ச்சை ஆஃப் செய்து மின் ஓட்டத்தை நிறுத்த வேண்டும். அல்லது ப்ளக் கட்டையை எடுத்து, மின் கம்பியைத் துண்டித்து மின் ஓட்டத்தைத் தடை செய்ய வேண்டும்.
  • உயர் மின் அழுத்தக் கம்பிகள் அறுந்து விழுந்து பாதிக்கப்பட்டவர் கம்பியைத் தொடாத நிலையில் கிடந்தாலும் அவரை நெருங்குவதோ, நேரடியாகத் தொட்டுத் தூக்குவதோ கூடாது. அதற்கு முதலில் மின் ஓட்டத்தை நிறுத்தி, நீண்ட உலர்ந்த மரக் கம்பு அல்லது கயிறு மூலம் பாதிக்கப்பட்டவரை அப்புறப்படுத்தி நாடித் துடிப்பைப் பரிசோதிக்க வேண்டும்.
  • இதயத் துடிப்பு தடைபட்டு இருந்தால், மார்புக்கு மத்தியில் நமது உள்ளங்கையால் நன்றாக அழுத்தி இதயத்தைச் செயல்படத் தூண்டலாம். சுவாசம் தடைபட்டு இருந்தால், பாதிக்கப்பட்டிருப்பவரின் வாய் அல்லது மூக்குப் பகுதியில் நம் வாயைப் பொருத்தி பலமாக ஊதி செயற்கை சுவாசம் கொடுக்கலாம்.


மெரினா புரட்சியை முடிவுக்குக் கொண்டு வந்த அந்த 18 மணி நேரம்!


2017 ஜனவரி 17-ம் தேதி தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான தடையை நீக்கக் கோரி சென்னை மெரினா கடற்கரையில் போராட்டம் தொடங்கியது. அடுத்தடுத்த நாட்களில் ஆயிரக்கணக்கில், லட்சக் கணக்கில் இளைஞர்கள் கூட்டம் அதிகரித்தது.

பீட்டாவுக்கு எதிராகவும், மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராகவும் களத்தில் இருந்தவர்கள் தீவிரமாக முழங்கினர். அறப்போராட்டம் ஒரு கொண்டாட்டமாக மாறியது.

இந்நிலையில், ஜல்லிக்கட்டுக்கான தடை நீக்கப்பட்டு தமிழக அரசு சார்பில் அவசரச் சட்டம் கொண்டு வரப்பட்டது. அதனை ஏற்க இந்த இளைஞர்கள் கூட்டம் மறுத்தது.

'எங்களுக்கு அவசரச் சட்டம் தேவையில்லை. நிரந்தரத் தீர்வே வேண்டும்' என விடாமல் போராடினார்கள். ஏழு நாட்கள் நீடித்த போராட்டம் நேற்று இறுதிக்கட்டத்தை எட்டியது.

நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் நேற்று மாலை வரை, மெரினாவில் நடந்தவை அனைத்தும் அப்படியே இங்கே...22.01.2017ஞாயிறு இரவு 10.30 மணி : மறுநாள் பொழுது விடிவதற்குள் மெரினா கடற்கரையைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர வேண்டும் எனஆளும் அரசும், அதிகார வர்க்கமும் விரும்புகின்றன என்பதை அங்குள்ள சூழல்களே உணர்த்தின. கடந்த ஆறு நாட்களாக இல்லாத அளவுக்குக் கொஞ்சம் கொஞ்சமாகக் காவல்துறையின் நடமாட்டம் மெரினா முழுவதும் அதிகரித்தது. சிலர், மஃப்டியிலும் போராட்டக்காரர்களின் மத்தியில் உலாவி மாணவர்களின் மனநிலையை மோப்பம் பிடித்தனர்.

நள்ளிரவு 12 முதல் 2 மணி வரை : களத்தில் இருந்த மாணவர்களும் தங்களைக் காவல்துறையினர் அப்புறப்படுத்தும் சூழல் இருப்பதை அறிந்தே இருந்தனர். அதனால், வயதான பெரியவர்களையும், குழந்தைகளையும், பெண்களையும் வீட்டுக்குச் செல்லும்படி கூறினார்கள். போக விருப்பம் இல்லாதவர்களைக் கட்டாயப்படுத்தி வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.

23.01.2017திங்கள் அதிகாலை 3:30 மணி! அங்கிருந்த போராட்டக்காரர்களை அகற்ற காவல்துறையினர் தடியடி நடத்தப்போவதாக தகவல் மெள்ள மெள்ள அங்கு இருப்பவர்களிடம் பரவியது. மைக்கில் எழுச்சியாகப் பேசிக்கொண்டிருந்த மாணவர்களில் சிலர், "எல்லாரும் சுற்றி அமருங்கள். காவல்துறை நம்மை எதுவும் செய்யமாட்டார்கள். இங்கிருந்து யாரும் கலைந்து செல்லக்கூடாது" என்று பேச, கடல் அலைகளை மீறிக் கைதட்டல்கள்.

3:40 மணி! போராட்டக் களத்தில் இருந்தவர்கள்... தங்கள் நண்பர்களுக்கு எல்லாம் செல்போனில் தொடர்ந்து அழைப்பு விடுத்தனர். உடனே மெரினா வரும்படி வாட்ஸ்அப் முதல் பல சமூகவலைதளங்களைப் பயன்படுத்தியும் வரச் சொன்னார்கள்.

4 மணி : பல்வேறு இடங்களில் இருந்தும் காவல்துறையினர் மெரினாவில் உள்ள விவேகானந்தர் இல்லத்துக்கு அருகில் குவியத் தொடங்கினார்கள். அதற்கு முன் ஆறு நாட்களில் இல்லாத அளவுக்கு அவர்கள் கைகளில் லத்திகள் முளைத்திருந்தன.

4.20 மணி : மாணவர்களுக்கும் இந்த தகவல்கள் வந்தன. "நம் மீது லத்தி சார்ஜ் நடத்தினால் கலையக்கூடாது. அப்படி தடியடி நடத்தினால், அவனைவரும் எழுந்து நின்று தமிழ்த்தாய் வாழ்த்தும், தேசிய கீதமும் பாட வேண்டும்." என மைக்பிடித்து அங்கிருந்த அனைவருக்கும் சொல்லிக்கொண்டிருந்தனர். இதற்கும் ஆதரவு தருவதாக கோஷங்கள் எழும்பின.4.33 மணி : "காவல்துறையினர் அடித்தால் திருப்பி அடிப்போம். அன்பால், திருப்பி அடிப்போம்" என கோஷங்கள் எழுப்பினர்.

4.40 மணி : மெரினாவில் இருந்து கலைந்து செல்லும்படி காவல்துறையினர் சார்பாக பத்திரிக்கை செய்தி வெளியிடப்பட்டது. அதில், 'மெரினா கடற்கரையில் கூடி போராட்டத்தில் ஈடுபட்டு வந்துள்ளீர்கள். இந்தப் போராட்டமானது மிகவும் கட்டுப்பாட்டுடனும், அமைதியாகவும் பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் எவ்வித இடையூறுமின்றி நடைபெற்றது.

தமிழக அரசின் முயற்சியால், ஜல்லிக்கட்டு விளையாட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் நேற்று நடைபெற்றது. போராட்டத்தின் குறிக்கோள் நிறைவேறியுள்ளதால் அனைவரும் மெரினா கடற்கரையிலிருந்து உடனடியாக கலைந்து செல்லும்படி, சென்னை பெருநகர காவல்துறை உங்களை கேட்டுக்கொள்கிறது' என செய்தி வெளியானது.

ஆனால், இந்த செய்தி மாணவர்களுக்குப் போய்ச் சேரவில்லை. அப்போதும் போராட்டக் களத்தில் இருந்தவர்கள் "நம் பாதுகாப்புக்கு மட்டுமே காவல்துறையினர் வந்துள்ளார்கள். அவர்கள் நம் நண்பர்கள். அவர்களுக்கும் குடிக்க தண்ணீர் தாருங்கள்... உணவு தாருங்கள்..." என அன்போடு ஒருவர் மைக்கில் சொல்ல... உடனே காவல்துறையினரைத் தேடித்தேடி தண்ணீர் பாட்டில்களும், பிஸ்கட் பாக்கெட் போன்றவற்றையும் கொடுத்தார்கள். காவல்துறையினரும் அதை வாங்கிக்கொண்டார்கள்.

4.50 மணி : மெரினா முழுவதிலும் காவல்துறையினர் சூழ்ந்தார்கள். விவேகானந்தர் இல்லம், கண்ணகி சிலை, சென்னைப் பல்கலைக்கழகம், லைட் ஹவுஸ் என அனைத்து இடங்களிலும் காவலர்களுக்கு வழிமுறைகள் தரப்பட்டன. அவர்கள் கைகளில் லத்திகளும் கொடுக்கப்பட்டன. அந்த சமயத்தில் கூட்டத்தில் இருப்பவர்களிடம் "யாரும் எழுந்து நிற்காதீர்கள். உட்காருங்கள்" என்றவாறு நின்றவர்களை மாணவர்களே அமர வைத்தனர். மேலும், கர்ப்பிணிப்பெண்கள், மாற்றுத்திறனாளிகள், குழந்தைகள் இருப்பதால் கூட்டத்துக்குள் போலீஸ் நுழையக்கூடாது." என காவல்துறையினருக்கு வேண்டுகோளும் விடுத்தனர்.

5 மணி : முக்கிய காவல்துறை அதிகாரிகள் மெரினா முழுவதும் அவர்களது சைரன் வாகனத்தில் சுற்றிச்சுற்றி வந்தனர்.

5.30 மணி : காவல்துறையினரிடம் தரப்பட்ட லத்திகள் அவர்களிடம் இருந்து திடீரென வாங்கப்பட்டன. ஆனால், பெரியார் மாளிகைக்கு எதிரில் திடீரென நான்கு காவலர்கள் வேகமாக கூட்டத்துக்குள் நுழைய மாணவர்கள் பெரும் கூச்சல் போட்டார்கள். உடனே, போலீசார் பின் வாங்கினார்கள்.

6.00 மணி : இரண்டு குழுக்களாக மெரினாவில் மாணவர்கள் அமர்ந்திருந்தனர். விவேகானந்தர் இல்லத்திற்கு நேர் எதிரிலும், பெரியார் மாளிகைக்கு நேர் எதிரிலும் இருந்தனர். அவர்கள் முன் வைக்கப்பட்டிருந்த தடுப்பரண்கள் அப்புறப்படுத்தப்பட்டன. பெரியார் மாளிகைக்கு எதிரில் அமர்ந்திருந்த மாணவர்கள் முன்தான் முதலில் காவல்துறை சென்றது.

மைக் கட்டிய ஆட்டோவில் காவலர் ஒருவர், "மாணவக் கண்மணிகளே... இது உங்களுக்கு கிடைத்த வெற்றி. நீங்கள் வென்றுவிட்டீர்கள். நேற்றே ஜல்லிக்கட்டுப் போட்டி தமிழகம் முழுவதும் நடந்தது. கலைந்து செல்லுங்கள். எங்கள் கைகளில் லத்தி கூட கிடையாது." என்று சொல்லியவாறே மாணவர்களை நெருங்கினார். மாணவர்கள் வைத்திருந்த மைக்குகள் பிடுங்கப்பட்டன. மைக் செட்டுகளும் உடனடியாக அகற்றப்பட்டன. மைக் செட்காரரை மிரட்டி அகற்றினார்கள்.

6.05 மணி : கொஞ்சம் கொஞ்சமாகக் காவல்துறையினர் கூட்டத்துக்குள் நுழைந்தார்கள். ஐந்து நிமிடம் கூட அவர்களுக்கு அவகாசம் தரவில்லை போலீஸ்காரர்கள். அதற்குள் மாணவர்கள் ஒருவருவருக்கு ஒருவர் கைகள் பற்றி இறுக அணைத்து அமர்ந்தார்கள். ஆனால் அவர்களை மூர்க்கமாகத் தரதரவென இழுத்து தூக்கி வீசினார்கள்.கூட்டத்தில் அமர்ந்திருந்த பெண்கள் சிலரை பெண் காவலர்கள், தலைமுடியைப் பிடித்து இழுத்தார்கள். கன்னத்தில் அறைந்தார்கள். மீடியாகாரர்கள் இதனைப் படம் பிடிக்க முயற்சிக்க, 'அந்தப் பக்கமா போங்க...' என்று போலீஸார் ஆக்ரோஷ குரல் கொடுத்தார்கள்.

6.15 மணி : பெரியார் மாளிகை முன் அமர்ந்த மொத்தக் கூட்டத்தையும் கலைத்தார்கள். ஆனால், அவர்கள் அனைவரும் ஓடிப்போய் விவேகனாந்தர் இல்லத்திற்கு எதிரில் அமர்ந்திருந்த மாணவக் கூட்டத்துடன் சேர்ந்துகொண்டார்கள். முன்பைவிட இரண்டுமடங்கானது கூட்டம்.

6.25 மணி : மைக் கட்டிய வேனில் ஏறிய காவலர், மொத்த பிரச்னையையும், ஆரம்பத்தில் இருந்து சொல்லி, தமிழக அரசு என்னென்ன நடவடிக்கை எடுத்திருக்கிறது. இது ஜல்லிக்கட்டுக்கான அவரச சட்டம் என்றாலும் நிரந்தர சட்டம்தான்' என்று பாயிண்ட் பை பாயிண்டாக பேசினார்.

சின்னச் சத்தம் கூட இல்லாமல் அனைத்தையும் கேட்ட மாணவர்கள். "நாங்கள் கலைந்து செல்கிறோம். ஆனால், எங்கள் சட்ட வல்லுனர்களிடம் பேச கொஞ்சம் அவகாசம் தாருங்கள். குறைந்தபட்சம் அரைநாளாவது வேண்டும் என்றார்கள்.

இதற்குக் காவல்துறையின் உயர் அதிகாரிகள் மறுப்பு தெரிவிக்க.. 'குறைந்தபட்சம் இரண்டு மணி நேரமாவது தாருங்கள்' என கெஞ்சினார்கள். கேட்கவில்லை. அதற்குள் கூட்டத்துக்குள் காக்கிகள் சூழ்ந்தன. கைகளில் லத்திகள் இல்லை என்றாலும் கண்மூடித்தனமாக மாணவர்களைக் கையாண்டது காவல்துறை.

கர்ப்பமாக இருந்த ஒரு பெண்மணியையும் சேர்த்து கூட்டத்தில் அமர்ந்திருந்த பெண்களைக் கைகளைப் பிடித்து இழுத்து தள்ளினார்கள். அப்போது சில காக்கிகளிடம் மட்டும் லத்திகள் இருந்தன. மீடியா கவரேஜ் இல்லாத இடத்தில் அவர்கள் தங்கள் லத்திகளைப் பயன்படுத்தத் தயங்கவில்லை.

மாணவர்கள் கடலை நோக்கி ஓடினார்கள். அவர்களைத் துரத்திக்கொண்டு காவல்துறையும் ஓடியது. சில மாணவர்கள் காவல்துறையின் அடுக்குமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்து கதறி அழுதார்கள்.

6.30 மணி : இதை கவரேஜ் செய்ய கடற்கரை நோக்கி ஓடிய மீடியாவை தடுத்து நிறுத்தினார் ஒரு முக்கிய காவல்துறை அதிகாரி. முக்கியமாக, ‛விகடன்’ என்றதும் கட்டாயமாக உள்ளே விட மறுத்தார்கள். வாக்குவாதம் ஆனது. வேறு மீடியாவைச் சேர்ந்தவர்கள் என்ன பிரச்னை என கேட்கவும்... அவர்கள் விலகிச் சென்றார்கள்.

6.40 மணி : கடற்கரை நோக்கி ஓடிய மாணவர்களைப் பிடிக்க முயல... 'நாங்கள் கடலுக்குள் சென்று தற்கொலை செய்வோம்." என அவர்கள் கூட்டமாய்க் குரலெழுப்ப, காவலர்கள் பின்வாங்கினார்கள். அதற்குள் ஒட்டுமொத்த கூட்டமும் கடற்கரைக்கு சென்றுவிட்டது. காக்கிகள் அருகில் வந்தாலே, கடலுக்குள் காலடி எடுத்து வைத்தனர்.

6.50 மணி : மெரினாவுக்குள் நுழையும் அனைத்து வழிகளிலும் தடுப்பரண்கள் அமைத்துத் தடுத்தது காவல்துறை. ஐஸ் அவுஸ் வழியாக மெரினாவுக்கு வரும் வழியில் பலரும் குவிந்தாலும் இவர்களை மீறி ஒரு அடி கூட முன் வைக்க முடியவில்லை.

7.30 மணி : லைட்அவுஸ் அருகில் வசிக்கும் மக்கள் கும்பலாக கடற்கரை ஓரமாக... போராட்டக்காரர்களை நோக்கி ஓடி வந்தனர். அவர்களைத் தடுக்க காவல்துறையினரால் முடியவில்லை. கூட்டம் அதிகமானது. சிலர் தள்ளுமுள்ளுவில் மயங்கி விழ... உடனே ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.

8.30 மணி : படகுகளில் உணவுகளும், குடிநீரும் போராட்டகாரர்களுக்காக வந்தன. அங்கிருந்த பெண்களுக்காக அங்கு கிடந்த தார்ப்பாய்களை எல்லாம் எடுத்து சிலர் உடனடிக் கழிப்பறைகள் அமைத்துத் தந்தார்கள்.மெரினா கடற்கரைச் சாலைகளில் இருந்து யாராவது ஒருவர் ஓடிவந்தாலே, அவர்களைப் பார்த்து மொத்தக் கூட்டமும் "வா... வா..." என வரவேற்றது. அவர்களில் சிலரைக் காவல்துறை லத்தியால் விரட்டி அடித்தது.

9.00 மணி : காவல்துறையினர் சென்று போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். ஆனால், யாரும் கேட்பதாக இல்லை. காவல்துறையினர் பின் வாங்கினார்கள்.

10.15 மணி : அனைத்து ஊர்களிலும் இளைஞர்கள் மீது காவல்துறையினர் வன்முறை தூண்டி விட்டதாக செய்தி பரவியதும்... பீட்டாவுக்கு எதிராகவும், தமிழக அரசுக்கு எதிராகவும் கோஷங்கள் போட்டனர்.

10.30 மணி : மாணவர்கள் அமைதியாக அமர... காவலர்களும் அவர்களைச் சுற்றி நின்றனர். சிலருக்குத் தண்ணீர் எடுத்துவர அவர்களை தடுத்தது போலீஸ். இதனால், ஆத்திரம் அடைந்தவர்கள் வெறித்தனமாக கத்தவும்... தண்ணீரை எடுத்துச் செல்ல அனுமதித்தது போலீஸ்.

11:30 மணி : லாரன்ஸ் வர இருப்பதாக தகவல் பரவியது. அதற்குள் திருவல்லிக்கேணி ஐஸ் ஹவுஸ் காவல் நிலையத்தில் தீ வைக்கப்பட்ட செய்தி அங்கு இருக்கும் காவலர்கள் மத்தியில் பரவியது. சிறப்பு காவல் படையினர் வந்து சேர்ந்தார்கள்... மெரினாவில் நின்று கொண்டிருந்த அனைவருக்கும் லத்திகள் வேக வேகமாகத் தரப்பட்டன. "கையில மட்டும் எவனாது சிக்கட்டும். அடி பொளந்துட வேண்டிதான்." என்ற ரீதியில் காவல்துறையினர் பேசுவதையும் கேட்க முடிந்தது. தண்ணீர் மற்றும் உணவு இல்லாமல் சிலர் மயங்கி விழுந்தனர். ஒருசிலர் கலைந்து சென்றனர்.

11.50 மணி : மீண்டும் போராட்டக்கார்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியது போலீஸ். "அரசின் சார்பில் யாராவது வந்து பேச வேண்டும். அல்லது ராகவா லாரன்ஸ் வந்து தங்களிடம் பேசினால் கலையத் தயார்." என நிபந்தனை வைத்தனர்.

12.30 மணி : மெரினா வந்தார் லாரன்ஸ். அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால், அது தோல்வியில் முடிந்தது. "போராட்டத்தில் வெற்றி அடைந்ததைக் கொண்டாட வேண்டிய நேரம் இது. தயவு செய்து போராட்டத்தைக் கைவிடுங்கள்." என்றார். ஆனால் யாரும் அசைய மறுத்தார்கள்.

1.30 மணி : மீண்டும் காவல்துறையின் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. பல்வேறு இடங்களிலும் வன்முறை வெடிக்கிறது என கூறியும் கலைய மறுத்தார்கள். 'நாங்கள் இரண்டு மணி நேரம் தானே தொடக்கத்தில் கேட்டோம். தந்தீர்களா?" என்று கோபக்குரல் எழுப்பினார்கள்.

2.30 மணி : சிலர் தண்ணீர் மட்டும் கொண்டு செல்வதற்கு காவல்துறையினர் அனுமதி தந்தனர். காவல்துறையை சேர்ந்த சிலர் மஃப்டியில் இருப்பதாக கூட்டத்தில் தகவல் பரவியதால் சின்ன சலசலப்பு ஏற்பட்டது.

3.15 மணி : 'நாம் தமிழர்' கட்சியின் சீமான் வருகை தந்தார். ஆனால், போராட்டக்காரர்கள் பேச மறுத்தனர்.

3.45 மணி : ஆர்.ஜே.பாலாஜி வந்தார். அவருக்கும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அவரும் கிளம்பினார்.

5.15 மணி : ஜல்லிக்கட்டுக்கான அவசரச் சட்டம் முன்வடிவு சட்டப் பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. தடையை முற்றிலும் நீக்கும் இந்த ஜல்லிக்கட்டு சட்ட மசோதா, பேரவையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

5.45 மணி : முன்னாள் நீதிபதி அரி பரந்தாமன், ஜல்லிக்கட்டு பிரச்னைகளை பற்றியும், அதன் சட்டச் சிக்கல்களையும் விரிவாக விளக்கினார். 'போராட்டத்தைத் தொடர்வதா? வேண்டாமா? என்பதை உங்கள் முடிவுக்கே விட்டு விடுவதாகவும் சொன்னார். அதன்பின்னரும் போராட்டக்காரர்கள் தொடர்வதாக சொன்னார்கள்.

6.15 மணி : ஒருசிலர் அரி பரந்தாமன் கூறிய கருத்துக்கு ஆதரவு தெரிவித்தனர். ஜல்லிக்கட்டு கோரி சென்னை மெரினா கடற்கரையில் மாணவர்கள் நடத்தி வந்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. மாபெரும் அறப்போராட்டம் முடிவுக்கு வந்தது.

உலகையே திரும்பிப் பார்க்க வைத்த இளைஞர்களின் 'மெரினா புரட்சி' வரலாற்றில் அழுந்தப் பதியப்பட்டது.

- Vikatan-
பனையுடன் மோதி பேருந்து விபத்து -4 பேர் காயம்


முல்லைத்தீவு முள்ளியவளை பொலிஸ் நிலையப்பிரிவிலுள்ள முல்லைத்தீவு - புளியங்குளம் வீதி பகுதியில் கோடாலிக் கல்லு வீதி வளைவில் திரும்பிய போது  வேகக் கட்டுப்பாட்டை இழந்த இலங்கை போக்குவரத்து சபையின் முல்லைத்தீவுச் சாலைக்குச் சொந்தமான பேருந்து பனை மரத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் நான்கு பேர் படுகாயம் அடைந்த நிலையில் மீட்கப்பட்ட நால்வரும் முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் காரியலயத் தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணியளவில் நடைபெற்றுள்ளது, இது தொடர்பில் மேலும் தெரியவருவது,

முல்லைத்தீவில்  இருந்து யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற விவசாயக் கண்காட்சியை பார்வையிடுவதற்காக  சென்றவர்கள் பயணித்த பேருந்தே விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்துச் சம்பவத்தில் பேருந்தின் நடத்துநரான ஜீ.கிறேஸ்குமார் (வயது - 25) உட்பட பயணிகள் நான்கு பேர் படுகாயம் அடைந்த நிலையில் மீட்கப்பட்டு முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து தொடர்பில் தகவல் கிடைத்ததும் விரைந்த சென்ற முள்ளியவளைப் போக்குவரத்துப் பொலிஸார் விபத்துக்குள்ளான பேருந்தை மீட்டு பொலிஸ் நிலையத்திற்கு எடுத்துச் சென்றதுடன் மேலதிக விசாரணைகளையும்  மேற்கொண்டு வருகின்றனர்.  

உலகத் தமிழர்கள் ஒன்றிணைந்து உலகக் கூட்டமைப்பு உருவாகட்டும் காலம் கனிந்துள்ளது என முதலமைச்சர் சி.வி உரை


உலகம் முழுவதுமுள்ள தமிழ்ப் பேசும் மக்கள் ஒன்றிணைந்து தமிழ் அகில உலகக் கூட்டமைப்பொன்று உருவாக வேண்டும் என தெரிவித்த வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன், அவ்அமைப்பை உருவாக்கும் காலம் தற்போது கனிந்துள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

சுழன்றும் ஏர்ப் பின்னது உலகம் எனும் தொனிப்பொருளில் வட மாகாண உழவர் பெருவிழா நேற்றைய தினம் யாழ். கோப்பாய் கிறிஸ்தவக் கல்லூரியில் இடம்பெற்றது. அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

இயற்கையைப் போற்றுவதற்கும், பூமிக்கு மழையை வழங்குவதற்கு உதவுகின்ற சூரிய பகவானை துதிப்பதற்கும், முற்றி விளைந்த நெற் கதிர்களை பெற்றுக்கொள்வதற்கு உதவிய உழவர்களைப் பாராட்டுவதற்கும், உழவுத் தொழிலுக்கு உதவிய எருதுகளை வணங்கித் தட்டிக் கொடுப்பதற்கும் ஏற்ற ஒரு தமிழர் திருநாளாக தைப்பொங்கல் இருந்து வருகின்றது.

தைப்பொங்கல் என்பது ஒரு குறிப்பிட்ட மதத்தைச் சார்ந்தவர்களுக்கே உரியதொரு கொண்டாட்டம் என்பது போய் முழுத்தமிழ் இனத்தையும் ஒற்றுமைப்படுத்தி  ஒன்றாகச் சேர்த்து கொண்டாட வழிவகுக்கும் ஒரு விழாவாக மாறியுள்ளது. அத்துடன் இந்துக்கள், கிறிஸ்தவர்கள் ஏன் இஸ்லாமியர் கூட தைப்பொங்கலைக் கொண்டாடுகின்றார்கள்.

இவ்வாறான தைப்பொங்கல் கொண்டாட்டம் முழுத்தமிழ் இனத்தையே சேர்க்க வல்லதாக இருக்கும் போது சகல நாடுகளிலும் உள்ள தமிழ்ப் பேசும் மக்களும் தமக்குள் ஒற்றுமையை வரவழைக்க, வளர்க்க தைப்பொங்கலை மையமாகக் கொண்டு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று கருதுகின்றேன்.

எவ்வாறு நாங்கள் நான்கைந்து கட்சிகளைச் சேர்த்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அமைத்தோமோ அதேபோல் உலகம் பூராகவும் உள்ள தமிழ்ப் பேசும் மக்கள் சேர்ந்து தமிழ் அகில உலகக் கூட்டமைப்பொன்றை உருவாக்கும் காலம் தற்போது கனிந்துள்ளது. இறைவன் அருளால் அவ்வாறான அமைப் பொன்று உருவாக வேண்டும் என்று பிரார்த்திக்கின்றேன்.

சாதி, மத, வர்க்க பேதமின்றி நாடுகள் கடந்து எம் மக்கள் அனைவரும் ஏகோபித்த குரலில் எமது குறைகளை உலகுக்கு எடுத்துக் கூற வேண்டும். அதற்குத் தைப்பொங்கல் மையமாக அமையட்டும்.
தைத் திருநாளில் தைப்பொங்கல் நிகழ்வுகளுடன் மேலதிகமாக தமிழர்களின் பாரம் பரிய விளையாட்டு நிகழ்வுகளாக ஜல்லிக் கட்டு அல்லது ஏறு தழுவல், உறியடித்தல், பட்டம் ஏற்றும் போட்டிகள் என பலதரப்பட்ட போட்டிகளிலும் மக்கள் ஈடுபடுவார்கள்.

இந்த வகையில் இயற்கையோடு ஒன்றிய வாழ்க்கையை உடைய தமிழ் மக்கள் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருவது எமக்கு மகிழ்வைத் தருகின்றது. எமது படித்த வாலிபர்கள் பலர் விவசாயத்தில் ஈடுபட வேண்டும். நவீன தொழில்நுட்ப அறிவுடன் விவசாயத்தில் தன்னிறைவைக் காண எமது படித்த வாலிபர்கள் முன்வரவேண்டும்.

தமிழ் மக்கள் விவசாயத்தின்பால் கொண்டுள்ள நாட்டத்தையும் விவசாயத்தின் மூலம் அவர்கள் பெற்றுக் கொள்கின்ற நன்மைகளையும் கண்ணுற்ற பலர் தமிழ் மக்களின் பூர்வீக நிலங்களை கையகப்படுத்துவதில் குறியாக இருக்கின்றார்களோ என்று எண்ண வேண்டியுள்ளது. விரைவில் இவ்வாறு கை யகப்படுத்தியுள்ளவர்கள் தாம் குடியேறி இருக்கும் காணிகளை மக்களிடம் திரும்பக் கையளிப்பார்கள் என்று எதிர்பார்க்கின்றேன்.

எது எவ்வாறு இருப்பினும் எமது மக்களின் விவசாய நிலங்கள் முழுமையாகப் பயன்படுத்தப்பட வேண்டும். எமது தரிசு நிலங்களில் ஒரு சிறு பகுதிகூட விவசாய  முயற்சிகளுக்கு பயன்படுத்தாது எஞ்சியிருக்கக் கூடாது. ஏதாவது காரணங்களால் சில நிலங்களில் விவசாய நடவடிக்கைகள் தொடர முடியாத விடத்து அக் காணிகளை தற்காலிகமாகவேனும் விவசாய அமைச்சு பொறுப் பேற்று அந் நிலங்களில் தோதான விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடுவதன் மூலம் எமது உற்பத்திகள் அதிகரிப்பதுடன் நிலங்களும் பாதுகாக்கப்படும்.

எவ்வாறு மழைநீர் ஒருதுளி கூட கடலை அடையாது சேமிக்கப்பட வேண்டுமோ தரிசு நிலங்களும் உரியவாறு பயன்படுத்தாமல் வைத்திருக்கப்படாது நாம் பார்த்துக் கொள்ள வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

வர்த்தகர்கள் நலன் சார்ந்தே செயற்படுகிறோம்: வவுனியா வர்த்தக சங்கம்...வர்த்தகர்கள் நலன் சார்ந்தே செயற்படுகிறோம்: வவுனியா வர்த்தக சங்கம்

வர்த்தகர்களின் நலன்சார்ந்தே நாம் செயற்படுகின்றோம் என வவுனியா வர்த்தகர் சங்கம் தெரிவித்துள்ளது.

அண்மையில் வவுனியா நகர மத்தியில் தனியார் பேரூந்து சேவையினரும், இலங்கை போக்குவரத்து சபையினருக்கும் இடையில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் வவுனியா வர்த்தகர் சங்கம் இ.போ.சவுக்கு சார்பாக செயற்பட்டதாக தனியார் பேரூந்து உரிமையாளர்கள் குற்றம் சாட்டியிருந்தனர்.

இந் நிலையில் இக் கூற்றுக்கு மறுப்பு தெரிவித்து வர்த்தகர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

பஸ்தரிப்பு நிலையத்திலும் அதனை அண்டிய பகுதிகளில் உள்ள வியாபார நிலையங்கள் அத்துடன் பொதுமக்கள் நலனிலும் உள்ள அக்கறையில் நாம் இ.போ.ச தரிப்பிடத்தில் அனைத்து உள்ளுர் சேவைகளையும் தனியாரும், இ.போ.சபையினரும் இணைந்து நடாத்த வேண்டும் என்பதையே எமது நிலைப்பாடாக வலியுறுத்தியிருந்தோம்.

தனியார் பஸ் உரிமையாளர்களுடனோ, ஊழிர்களுடனோ அல்லது தனியார் பஸ்நிர்வாகத்துடனோ எவ்வித வெறுப்போ அல்லது வேற்றுமையோ எமக்கு கிடையாது.

தனியார் பஸ்களில் எமது அமைப்புக்களில் கடமையாற்றுக்கின்ற ஊழியர்கள் வருகின்றார்கள் போகின்றார்கள். அதனையும் நாம்அறிவோம். எனவே வவுனியா வர்த்தகர் சங்கம் இ.போ.சவுக்கு சார்பாக செயற்பாடுகின்றது என கருதுவது தவறானதென தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றோம்.

அத்துடன் பாடசாலை மாணவர்கள், பொதுமக்கள் நலன்பெறும் வகையில் இ.போ.சபை, தனியார் பேரூந்து உரிமையாளர்கள் ஆகிய இரு தரப்பும் இணைந்து செயற்பட வேண்டும் என தெரிவிப்பதுடன வர்த்தகர் சங்கம் முக்கியமாக வர்த்தகர்களுக்காக செயற்படும் அமைப்பாக காணப்படுகின்றது.

அதனால் வர்த்தகர்களுக்கு பாதிப்புக்கள் ஏற்படும் போது அதற்காக செயற்பட வேண்டிய பொறுப்பு எமக்குள்ளது. எனவே வர்த்தகர் சங்கம் மீது தவறான அபிப்பிராயங்களை கொள்ளவேண்டாம் என அவ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவில் மீளக் குடியமர்ந்துள்ள மக்களின் அவலம்...


முல்லைத்தீவு மாவட்டத்திலே போருக்குப் பின்னர் மீள்குடியேற்றம் செய்யப்பட்ட பல குடும்பங்களுக்கு நிரந்தர வீடுகள் கிடைக்காததன் காரணமாக மீளக் குடியமர்ந்துள்ள குடும்பங்கள் பாதிக்கப்பட்ட நிலையில் தமது வாழ்க்கையை நடாத்த வேண்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறிப்பாக கிராமங்களில் உள்ள மக்கள் தமக்கு வீடு கிடைக்காததன் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் போரினால் தமது சொத்துகள் அனைத்தும் இழந்து நலன்புரி

முகாம்களில் ஓராண்டுகளுக்கு மேலாக வாழ்க்கை நடாத்தி தமது சொந்த இடத்தில் குடியமர்த்தப்பட்டாலும் வழங்கப்பட்டுள்ள உதவிகள் தமது வாழ்க்கை நடாத்துவதற்கு

போதுமானதாக இல்லை என கூறியுள்ளனர்.

அத்துடன், தற்காலிக வீடுகளில் 07 ஆண்டுகள் வாழ்க்கை நடாத்துவதாகவும் கடந்த ஆட்சிக் காலத்திலும் வீடுகள் கிடைக்கவில்லை என குறிப்பிட்டுள்ளனர்.

நல்லாட்சி என்று சொல்லப்படுகின்ற தற்போதைய ஆட்சிக் காலத்திலும் வீடுகள் கிடைக்கவில்லை. நாம் அரசிடம் கேட்பது போர்காலத்தில் அழிக்கப்பட்ட எமது வீடுகளுக்குப் பதிலாக புதிய வீடுகளை அமைத்துத் தாருங்கள் என்பதையே அதனை விரைந்து செய்வதன் மூலமாகவே எமது வாழ்வாதாரத்தினை உயர்த்திக் கொள்ள முடியும் என அறிவித்துள்ளனர்.

மேலும்,கிராமங்களில் போக்குவரத்து, மருத்துவ வசதிகள் குறைந்து காணப்படுவதன் காரணமாக நிரந்தர வீடுகளையாவது விரைவாக அமைத்துத் தாருங்கள் என பாதிக்கப்பட்டுள்ள மக்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஊறணி பகுதியில் விரைவில் காணி விடுவிப்பு....


வலி-வடக்கு ஊறணி பகுதியில் உள்ள பொதுமக்களின் ஒருபகுதி நிலம் இந்த மாத இறுதிக்குள் விடுவி க்கப்படக்கூடிய சாத்தியக்கூறுகள் இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
வலி வடக்கு இராணுவ உயர் பாதுகாப்பு வலயத்துக்குட்பட்ட காணிகள் சிறிது சிறிதாக விடுவிக்கப்பட்டு வருகின்ற நிலையில்  மக்கள் தமது வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கு ஏற்றவகையில் தமது நிலங் களை விடுவிக்குமாறு கோரி வருகின்றனர்.

இந்த நிலையில் அண்மையில் ஊறணி இறங்குதுறைக்கு அருகில் உள்ள கடற்கரைப்பகுதி மற்றும் அதனுடன் கூடிய 2 ஏக்கர் காணி  படையினரால் விடுவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் குறித்த பகுதியில் தாம் தொழில் செய்ய முடியாது என்றும் தமது இறங்குதுறை மற்றும் அதனை அண்டிய நிலங்களை விடுவித்தால் மாத்திரமே தாம் மீன்பிடித் தொழிலை மேற்கொள்ள முடியும் என மக்கள் தொடர்ச்சியாக கோரிக்கைகளை முன்வைத்த வண்ணம் உள்ளனர்.

அந்த வகையில் குறித்த பகுதிகளை விரைவில் விடுவிக்க வேண்டும் என இராணுவத்திடம் அரச அதிகாரிகள் கோரிக்கை விடுத்தனையடுத்து இம்மாத இறுதிக்குள் ஊறணி இறங்குதுறை மற்றும் அதனையண்டிய நிலம் விடுவிப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக உயர் அதிகாரிகள் தெரிவித்து ள்ளனர்.                                   

வவுனியாவில் விபத்து - ஒருவர் படுகாயம்-Photosவவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

குறித்த விபத்து சம்பவம் குருமன்காட்டு சந்திக்கு அருகாமையில் இடம்பெற்றுள்ளது.

வவுனியா மன்னார் வீதியில் வேப்பங்குளம் பகுதியில் இருந்து வவுனியா நகர் நோக்கி பயணித்து கொண்டிருந்த கனரக வாகனம் ஒன்றை முச்சக்கர வண்டி ஒன்று முந்தி செல்ல முற்பட்ட வேளையில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

பட்டாணிச்சூர் பகுதியில் பணி புரியும் ரூபன் என்பவரே பலத்த காயங்களுக்கு உள்ளாகி வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மது போதையில் வாகனம் செலுத்திய குற்றசாட்டின் பெயரில் முச்சக்கர வண்டி சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

விபத்தை ஏற்படுத்திய முச்சக்கர வண்டி சாரதி தப்பி ஓடிய வேளையில் அப்பகுதியில் நின்றவர்களால் பிடிக்கப்பட்டு பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

இதனால் அப்பகுதியில் முப்பது நிமிடம் வாகன போக்குவரத்து தடைப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா போக்குவரத்து பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.Photos