Slider

காணொளிகள்

மன்னார் செய்திகள்

விம்பம்

உள்நாட்டு செய்திகள்

சர்வதேச செய்திகள்

பல்சுவை

School events

கல்வித்தளம்

மருத்துவம்

புகைப்படத்தளம்

கட்டுரைகள்

சினிமா

மெரினா புரட்சியை முடிவுக்குக் கொண்டு வந்த அந்த 18 மணி நேரம்!


2017 ஜனவரி 17-ம் தேதி தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான தடையை நீக்கக் கோரி சென்னை மெரினா கடற்கரையில் போராட்டம் தொடங்கியது. அடுத்தடுத்த நாட்களில் ஆயிரக்கணக்கில், லட்சக் கணக்கில் இளைஞர்கள் கூட்டம் அதிகரித்தது.

பீட்டாவுக்கு எதிராகவும், மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராகவும் களத்தில் இருந்தவர்கள் தீவிரமாக முழங்கினர். அறப்போராட்டம் ஒரு கொண்டாட்டமாக மாறியது.

இந்நிலையில், ஜல்லிக்கட்டுக்கான தடை நீக்கப்பட்டு தமிழக அரசு சார்பில் அவசரச் சட்டம் கொண்டு வரப்பட்டது. அதனை ஏற்க இந்த இளைஞர்கள் கூட்டம் மறுத்தது.

'எங்களுக்கு அவசரச் சட்டம் தேவையில்லை. நிரந்தரத் தீர்வே வேண்டும்' என விடாமல் போராடினார்கள். ஏழு நாட்கள் நீடித்த போராட்டம் நேற்று இறுதிக்கட்டத்தை எட்டியது.

நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் நேற்று மாலை வரை, மெரினாவில் நடந்தவை அனைத்தும் அப்படியே இங்கே...22.01.2017ஞாயிறு இரவு 10.30 மணி : மறுநாள் பொழுது விடிவதற்குள் மெரினா கடற்கரையைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர வேண்டும் எனஆளும் அரசும், அதிகார வர்க்கமும் விரும்புகின்றன என்பதை அங்குள்ள சூழல்களே உணர்த்தின. கடந்த ஆறு நாட்களாக இல்லாத அளவுக்குக் கொஞ்சம் கொஞ்சமாகக் காவல்துறையின் நடமாட்டம் மெரினா முழுவதும் அதிகரித்தது. சிலர், மஃப்டியிலும் போராட்டக்காரர்களின் மத்தியில் உலாவி மாணவர்களின் மனநிலையை மோப்பம் பிடித்தனர்.

நள்ளிரவு 12 முதல் 2 மணி வரை : களத்தில் இருந்த மாணவர்களும் தங்களைக் காவல்துறையினர் அப்புறப்படுத்தும் சூழல் இருப்பதை அறிந்தே இருந்தனர். அதனால், வயதான பெரியவர்களையும், குழந்தைகளையும், பெண்களையும் வீட்டுக்குச் செல்லும்படி கூறினார்கள். போக விருப்பம் இல்லாதவர்களைக் கட்டாயப்படுத்தி வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.

23.01.2017திங்கள் அதிகாலை 3:30 மணி! அங்கிருந்த போராட்டக்காரர்களை அகற்ற காவல்துறையினர் தடியடி நடத்தப்போவதாக தகவல் மெள்ள மெள்ள அங்கு இருப்பவர்களிடம் பரவியது. மைக்கில் எழுச்சியாகப் பேசிக்கொண்டிருந்த மாணவர்களில் சிலர், "எல்லாரும் சுற்றி அமருங்கள். காவல்துறை நம்மை எதுவும் செய்யமாட்டார்கள். இங்கிருந்து யாரும் கலைந்து செல்லக்கூடாது" என்று பேச, கடல் அலைகளை மீறிக் கைதட்டல்கள்.

3:40 மணி! போராட்டக் களத்தில் இருந்தவர்கள்... தங்கள் நண்பர்களுக்கு எல்லாம் செல்போனில் தொடர்ந்து அழைப்பு விடுத்தனர். உடனே மெரினா வரும்படி வாட்ஸ்அப் முதல் பல சமூகவலைதளங்களைப் பயன்படுத்தியும் வரச் சொன்னார்கள்.

4 மணி : பல்வேறு இடங்களில் இருந்தும் காவல்துறையினர் மெரினாவில் உள்ள விவேகானந்தர் இல்லத்துக்கு அருகில் குவியத் தொடங்கினார்கள். அதற்கு முன் ஆறு நாட்களில் இல்லாத அளவுக்கு அவர்கள் கைகளில் லத்திகள் முளைத்திருந்தன.

4.20 மணி : மாணவர்களுக்கும் இந்த தகவல்கள் வந்தன. "நம் மீது லத்தி சார்ஜ் நடத்தினால் கலையக்கூடாது. அப்படி தடியடி நடத்தினால், அவனைவரும் எழுந்து நின்று தமிழ்த்தாய் வாழ்த்தும், தேசிய கீதமும் பாட வேண்டும்." என மைக்பிடித்து அங்கிருந்த அனைவருக்கும் சொல்லிக்கொண்டிருந்தனர். இதற்கும் ஆதரவு தருவதாக கோஷங்கள் எழும்பின.4.33 மணி : "காவல்துறையினர் அடித்தால் திருப்பி அடிப்போம். அன்பால், திருப்பி அடிப்போம்" என கோஷங்கள் எழுப்பினர்.

4.40 மணி : மெரினாவில் இருந்து கலைந்து செல்லும்படி காவல்துறையினர் சார்பாக பத்திரிக்கை செய்தி வெளியிடப்பட்டது. அதில், 'மெரினா கடற்கரையில் கூடி போராட்டத்தில் ஈடுபட்டு வந்துள்ளீர்கள். இந்தப் போராட்டமானது மிகவும் கட்டுப்பாட்டுடனும், அமைதியாகவும் பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் எவ்வித இடையூறுமின்றி நடைபெற்றது.

தமிழக அரசின் முயற்சியால், ஜல்லிக்கட்டு விளையாட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் நேற்று நடைபெற்றது. போராட்டத்தின் குறிக்கோள் நிறைவேறியுள்ளதால் அனைவரும் மெரினா கடற்கரையிலிருந்து உடனடியாக கலைந்து செல்லும்படி, சென்னை பெருநகர காவல்துறை உங்களை கேட்டுக்கொள்கிறது' என செய்தி வெளியானது.

ஆனால், இந்த செய்தி மாணவர்களுக்குப் போய்ச் சேரவில்லை. அப்போதும் போராட்டக் களத்தில் இருந்தவர்கள் "நம் பாதுகாப்புக்கு மட்டுமே காவல்துறையினர் வந்துள்ளார்கள். அவர்கள் நம் நண்பர்கள். அவர்களுக்கும் குடிக்க தண்ணீர் தாருங்கள்... உணவு தாருங்கள்..." என அன்போடு ஒருவர் மைக்கில் சொல்ல... உடனே காவல்துறையினரைத் தேடித்தேடி தண்ணீர் பாட்டில்களும், பிஸ்கட் பாக்கெட் போன்றவற்றையும் கொடுத்தார்கள். காவல்துறையினரும் அதை வாங்கிக்கொண்டார்கள்.

4.50 மணி : மெரினா முழுவதிலும் காவல்துறையினர் சூழ்ந்தார்கள். விவேகானந்தர் இல்லம், கண்ணகி சிலை, சென்னைப் பல்கலைக்கழகம், லைட் ஹவுஸ் என அனைத்து இடங்களிலும் காவலர்களுக்கு வழிமுறைகள் தரப்பட்டன. அவர்கள் கைகளில் லத்திகளும் கொடுக்கப்பட்டன. அந்த சமயத்தில் கூட்டத்தில் இருப்பவர்களிடம் "யாரும் எழுந்து நிற்காதீர்கள். உட்காருங்கள்" என்றவாறு நின்றவர்களை மாணவர்களே அமர வைத்தனர். மேலும், கர்ப்பிணிப்பெண்கள், மாற்றுத்திறனாளிகள், குழந்தைகள் இருப்பதால் கூட்டத்துக்குள் போலீஸ் நுழையக்கூடாது." என காவல்துறையினருக்கு வேண்டுகோளும் விடுத்தனர்.

5 மணி : முக்கிய காவல்துறை அதிகாரிகள் மெரினா முழுவதும் அவர்களது சைரன் வாகனத்தில் சுற்றிச்சுற்றி வந்தனர்.

5.30 மணி : காவல்துறையினரிடம் தரப்பட்ட லத்திகள் அவர்களிடம் இருந்து திடீரென வாங்கப்பட்டன. ஆனால், பெரியார் மாளிகைக்கு எதிரில் திடீரென நான்கு காவலர்கள் வேகமாக கூட்டத்துக்குள் நுழைய மாணவர்கள் பெரும் கூச்சல் போட்டார்கள். உடனே, போலீசார் பின் வாங்கினார்கள்.

6.00 மணி : இரண்டு குழுக்களாக மெரினாவில் மாணவர்கள் அமர்ந்திருந்தனர். விவேகானந்தர் இல்லத்திற்கு நேர் எதிரிலும், பெரியார் மாளிகைக்கு நேர் எதிரிலும் இருந்தனர். அவர்கள் முன் வைக்கப்பட்டிருந்த தடுப்பரண்கள் அப்புறப்படுத்தப்பட்டன. பெரியார் மாளிகைக்கு எதிரில் அமர்ந்திருந்த மாணவர்கள் முன்தான் முதலில் காவல்துறை சென்றது.

மைக் கட்டிய ஆட்டோவில் காவலர் ஒருவர், "மாணவக் கண்மணிகளே... இது உங்களுக்கு கிடைத்த வெற்றி. நீங்கள் வென்றுவிட்டீர்கள். நேற்றே ஜல்லிக்கட்டுப் போட்டி தமிழகம் முழுவதும் நடந்தது. கலைந்து செல்லுங்கள். எங்கள் கைகளில் லத்தி கூட கிடையாது." என்று சொல்லியவாறே மாணவர்களை நெருங்கினார். மாணவர்கள் வைத்திருந்த மைக்குகள் பிடுங்கப்பட்டன. மைக் செட்டுகளும் உடனடியாக அகற்றப்பட்டன. மைக் செட்காரரை மிரட்டி அகற்றினார்கள்.

6.05 மணி : கொஞ்சம் கொஞ்சமாகக் காவல்துறையினர் கூட்டத்துக்குள் நுழைந்தார்கள். ஐந்து நிமிடம் கூட அவர்களுக்கு அவகாசம் தரவில்லை போலீஸ்காரர்கள். அதற்குள் மாணவர்கள் ஒருவருவருக்கு ஒருவர் கைகள் பற்றி இறுக அணைத்து அமர்ந்தார்கள். ஆனால் அவர்களை மூர்க்கமாகத் தரதரவென இழுத்து தூக்கி வீசினார்கள்.கூட்டத்தில் அமர்ந்திருந்த பெண்கள் சிலரை பெண் காவலர்கள், தலைமுடியைப் பிடித்து இழுத்தார்கள். கன்னத்தில் அறைந்தார்கள். மீடியாகாரர்கள் இதனைப் படம் பிடிக்க முயற்சிக்க, 'அந்தப் பக்கமா போங்க...' என்று போலீஸார் ஆக்ரோஷ குரல் கொடுத்தார்கள்.

6.15 மணி : பெரியார் மாளிகை முன் அமர்ந்த மொத்தக் கூட்டத்தையும் கலைத்தார்கள். ஆனால், அவர்கள் அனைவரும் ஓடிப்போய் விவேகனாந்தர் இல்லத்திற்கு எதிரில் அமர்ந்திருந்த மாணவக் கூட்டத்துடன் சேர்ந்துகொண்டார்கள். முன்பைவிட இரண்டுமடங்கானது கூட்டம்.

6.25 மணி : மைக் கட்டிய வேனில் ஏறிய காவலர், மொத்த பிரச்னையையும், ஆரம்பத்தில் இருந்து சொல்லி, தமிழக அரசு என்னென்ன நடவடிக்கை எடுத்திருக்கிறது. இது ஜல்லிக்கட்டுக்கான அவரச சட்டம் என்றாலும் நிரந்தர சட்டம்தான்' என்று பாயிண்ட் பை பாயிண்டாக பேசினார்.

சின்னச் சத்தம் கூட இல்லாமல் அனைத்தையும் கேட்ட மாணவர்கள். "நாங்கள் கலைந்து செல்கிறோம். ஆனால், எங்கள் சட்ட வல்லுனர்களிடம் பேச கொஞ்சம் அவகாசம் தாருங்கள். குறைந்தபட்சம் அரைநாளாவது வேண்டும் என்றார்கள்.

இதற்குக் காவல்துறையின் உயர் அதிகாரிகள் மறுப்பு தெரிவிக்க.. 'குறைந்தபட்சம் இரண்டு மணி நேரமாவது தாருங்கள்' என கெஞ்சினார்கள். கேட்கவில்லை. அதற்குள் கூட்டத்துக்குள் காக்கிகள் சூழ்ந்தன. கைகளில் லத்திகள் இல்லை என்றாலும் கண்மூடித்தனமாக மாணவர்களைக் கையாண்டது காவல்துறை.

கர்ப்பமாக இருந்த ஒரு பெண்மணியையும் சேர்த்து கூட்டத்தில் அமர்ந்திருந்த பெண்களைக் கைகளைப் பிடித்து இழுத்து தள்ளினார்கள். அப்போது சில காக்கிகளிடம் மட்டும் லத்திகள் இருந்தன. மீடியா கவரேஜ் இல்லாத இடத்தில் அவர்கள் தங்கள் லத்திகளைப் பயன்படுத்தத் தயங்கவில்லை.

மாணவர்கள் கடலை நோக்கி ஓடினார்கள். அவர்களைத் துரத்திக்கொண்டு காவல்துறையும் ஓடியது. சில மாணவர்கள் காவல்துறையின் அடுக்குமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்து கதறி அழுதார்கள்.

6.30 மணி : இதை கவரேஜ் செய்ய கடற்கரை நோக்கி ஓடிய மீடியாவை தடுத்து நிறுத்தினார் ஒரு முக்கிய காவல்துறை அதிகாரி. முக்கியமாக, ‛விகடன்’ என்றதும் கட்டாயமாக உள்ளே விட மறுத்தார்கள். வாக்குவாதம் ஆனது. வேறு மீடியாவைச் சேர்ந்தவர்கள் என்ன பிரச்னை என கேட்கவும்... அவர்கள் விலகிச் சென்றார்கள்.

6.40 மணி : கடற்கரை நோக்கி ஓடிய மாணவர்களைப் பிடிக்க முயல... 'நாங்கள் கடலுக்குள் சென்று தற்கொலை செய்வோம்." என அவர்கள் கூட்டமாய்க் குரலெழுப்ப, காவலர்கள் பின்வாங்கினார்கள். அதற்குள் ஒட்டுமொத்த கூட்டமும் கடற்கரைக்கு சென்றுவிட்டது. காக்கிகள் அருகில் வந்தாலே, கடலுக்குள் காலடி எடுத்து வைத்தனர்.

6.50 மணி : மெரினாவுக்குள் நுழையும் அனைத்து வழிகளிலும் தடுப்பரண்கள் அமைத்துத் தடுத்தது காவல்துறை. ஐஸ் அவுஸ் வழியாக மெரினாவுக்கு வரும் வழியில் பலரும் குவிந்தாலும் இவர்களை மீறி ஒரு அடி கூட முன் வைக்க முடியவில்லை.

7.30 மணி : லைட்அவுஸ் அருகில் வசிக்கும் மக்கள் கும்பலாக கடற்கரை ஓரமாக... போராட்டக்காரர்களை நோக்கி ஓடி வந்தனர். அவர்களைத் தடுக்க காவல்துறையினரால் முடியவில்லை. கூட்டம் அதிகமானது. சிலர் தள்ளுமுள்ளுவில் மயங்கி விழ... உடனே ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.

8.30 மணி : படகுகளில் உணவுகளும், குடிநீரும் போராட்டகாரர்களுக்காக வந்தன. அங்கிருந்த பெண்களுக்காக அங்கு கிடந்த தார்ப்பாய்களை எல்லாம் எடுத்து சிலர் உடனடிக் கழிப்பறைகள் அமைத்துத் தந்தார்கள்.மெரினா கடற்கரைச் சாலைகளில் இருந்து யாராவது ஒருவர் ஓடிவந்தாலே, அவர்களைப் பார்த்து மொத்தக் கூட்டமும் "வா... வா..." என வரவேற்றது. அவர்களில் சிலரைக் காவல்துறை லத்தியால் விரட்டி அடித்தது.

9.00 மணி : காவல்துறையினர் சென்று போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். ஆனால், யாரும் கேட்பதாக இல்லை. காவல்துறையினர் பின் வாங்கினார்கள்.

10.15 மணி : அனைத்து ஊர்களிலும் இளைஞர்கள் மீது காவல்துறையினர் வன்முறை தூண்டி விட்டதாக செய்தி பரவியதும்... பீட்டாவுக்கு எதிராகவும், தமிழக அரசுக்கு எதிராகவும் கோஷங்கள் போட்டனர்.

10.30 மணி : மாணவர்கள் அமைதியாக அமர... காவலர்களும் அவர்களைச் சுற்றி நின்றனர். சிலருக்குத் தண்ணீர் எடுத்துவர அவர்களை தடுத்தது போலீஸ். இதனால், ஆத்திரம் அடைந்தவர்கள் வெறித்தனமாக கத்தவும்... தண்ணீரை எடுத்துச் செல்ல அனுமதித்தது போலீஸ்.

11:30 மணி : லாரன்ஸ் வர இருப்பதாக தகவல் பரவியது. அதற்குள் திருவல்லிக்கேணி ஐஸ் ஹவுஸ் காவல் நிலையத்தில் தீ வைக்கப்பட்ட செய்தி அங்கு இருக்கும் காவலர்கள் மத்தியில் பரவியது. சிறப்பு காவல் படையினர் வந்து சேர்ந்தார்கள்... மெரினாவில் நின்று கொண்டிருந்த அனைவருக்கும் லத்திகள் வேக வேகமாகத் தரப்பட்டன. "கையில மட்டும் எவனாது சிக்கட்டும். அடி பொளந்துட வேண்டிதான்." என்ற ரீதியில் காவல்துறையினர் பேசுவதையும் கேட்க முடிந்தது. தண்ணீர் மற்றும் உணவு இல்லாமல் சிலர் மயங்கி விழுந்தனர். ஒருசிலர் கலைந்து சென்றனர்.

11.50 மணி : மீண்டும் போராட்டக்கார்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியது போலீஸ். "அரசின் சார்பில் யாராவது வந்து பேச வேண்டும். அல்லது ராகவா லாரன்ஸ் வந்து தங்களிடம் பேசினால் கலையத் தயார்." என நிபந்தனை வைத்தனர்.

12.30 மணி : மெரினா வந்தார் லாரன்ஸ். அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால், அது தோல்வியில் முடிந்தது. "போராட்டத்தில் வெற்றி அடைந்ததைக் கொண்டாட வேண்டிய நேரம் இது. தயவு செய்து போராட்டத்தைக் கைவிடுங்கள்." என்றார். ஆனால் யாரும் அசைய மறுத்தார்கள்.

1.30 மணி : மீண்டும் காவல்துறையின் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. பல்வேறு இடங்களிலும் வன்முறை வெடிக்கிறது என கூறியும் கலைய மறுத்தார்கள். 'நாங்கள் இரண்டு மணி நேரம் தானே தொடக்கத்தில் கேட்டோம். தந்தீர்களா?" என்று கோபக்குரல் எழுப்பினார்கள்.

2.30 மணி : சிலர் தண்ணீர் மட்டும் கொண்டு செல்வதற்கு காவல்துறையினர் அனுமதி தந்தனர். காவல்துறையை சேர்ந்த சிலர் மஃப்டியில் இருப்பதாக கூட்டத்தில் தகவல் பரவியதால் சின்ன சலசலப்பு ஏற்பட்டது.

3.15 மணி : 'நாம் தமிழர்' கட்சியின் சீமான் வருகை தந்தார். ஆனால், போராட்டக்காரர்கள் பேச மறுத்தனர்.

3.45 மணி : ஆர்.ஜே.பாலாஜி வந்தார். அவருக்கும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அவரும் கிளம்பினார்.

5.15 மணி : ஜல்லிக்கட்டுக்கான அவசரச் சட்டம் முன்வடிவு சட்டப் பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. தடையை முற்றிலும் நீக்கும் இந்த ஜல்லிக்கட்டு சட்ட மசோதா, பேரவையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

5.45 மணி : முன்னாள் நீதிபதி அரி பரந்தாமன், ஜல்லிக்கட்டு பிரச்னைகளை பற்றியும், அதன் சட்டச் சிக்கல்களையும் விரிவாக விளக்கினார். 'போராட்டத்தைத் தொடர்வதா? வேண்டாமா? என்பதை உங்கள் முடிவுக்கே விட்டு விடுவதாகவும் சொன்னார். அதன்பின்னரும் போராட்டக்காரர்கள் தொடர்வதாக சொன்னார்கள்.

6.15 மணி : ஒருசிலர் அரி பரந்தாமன் கூறிய கருத்துக்கு ஆதரவு தெரிவித்தனர். ஜல்லிக்கட்டு கோரி சென்னை மெரினா கடற்கரையில் மாணவர்கள் நடத்தி வந்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. மாபெரும் அறப்போராட்டம் முடிவுக்கு வந்தது.

உலகையே திரும்பிப் பார்க்க வைத்த இளைஞர்களின் 'மெரினா புரட்சி' வரலாற்றில் அழுந்தப் பதியப்பட்டது.

- Vikatan-
உலகத் தமிழர்கள் ஒன்றிணைந்து உலகக் கூட்டமைப்பு உருவாகட்டும் காலம் கனிந்துள்ளது என முதலமைச்சர் சி.வி உரை


உலகம் முழுவதுமுள்ள தமிழ்ப் பேசும் மக்கள் ஒன்றிணைந்து தமிழ் அகில உலகக் கூட்டமைப்பொன்று உருவாக வேண்டும் என தெரிவித்த வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன், அவ்அமைப்பை உருவாக்கும் காலம் தற்போது கனிந்துள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

சுழன்றும் ஏர்ப் பின்னது உலகம் எனும் தொனிப்பொருளில் வட மாகாண உழவர் பெருவிழா நேற்றைய தினம் யாழ். கோப்பாய் கிறிஸ்தவக் கல்லூரியில் இடம்பெற்றது. அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

இயற்கையைப் போற்றுவதற்கும், பூமிக்கு மழையை வழங்குவதற்கு உதவுகின்ற சூரிய பகவானை துதிப்பதற்கும், முற்றி விளைந்த நெற் கதிர்களை பெற்றுக்கொள்வதற்கு உதவிய உழவர்களைப் பாராட்டுவதற்கும், உழவுத் தொழிலுக்கு உதவிய எருதுகளை வணங்கித் தட்டிக் கொடுப்பதற்கும் ஏற்ற ஒரு தமிழர் திருநாளாக தைப்பொங்கல் இருந்து வருகின்றது.

தைப்பொங்கல் என்பது ஒரு குறிப்பிட்ட மதத்தைச் சார்ந்தவர்களுக்கே உரியதொரு கொண்டாட்டம் என்பது போய் முழுத்தமிழ் இனத்தையும் ஒற்றுமைப்படுத்தி  ஒன்றாகச் சேர்த்து கொண்டாட வழிவகுக்கும் ஒரு விழாவாக மாறியுள்ளது. அத்துடன் இந்துக்கள், கிறிஸ்தவர்கள் ஏன் இஸ்லாமியர் கூட தைப்பொங்கலைக் கொண்டாடுகின்றார்கள்.

இவ்வாறான தைப்பொங்கல் கொண்டாட்டம் முழுத்தமிழ் இனத்தையே சேர்க்க வல்லதாக இருக்கும் போது சகல நாடுகளிலும் உள்ள தமிழ்ப் பேசும் மக்களும் தமக்குள் ஒற்றுமையை வரவழைக்க, வளர்க்க தைப்பொங்கலை மையமாகக் கொண்டு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று கருதுகின்றேன்.

எவ்வாறு நாங்கள் நான்கைந்து கட்சிகளைச் சேர்த்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அமைத்தோமோ அதேபோல் உலகம் பூராகவும் உள்ள தமிழ்ப் பேசும் மக்கள் சேர்ந்து தமிழ் அகில உலகக் கூட்டமைப்பொன்றை உருவாக்கும் காலம் தற்போது கனிந்துள்ளது. இறைவன் அருளால் அவ்வாறான அமைப் பொன்று உருவாக வேண்டும் என்று பிரார்த்திக்கின்றேன்.

சாதி, மத, வர்க்க பேதமின்றி நாடுகள் கடந்து எம் மக்கள் அனைவரும் ஏகோபித்த குரலில் எமது குறைகளை உலகுக்கு எடுத்துக் கூற வேண்டும். அதற்குத் தைப்பொங்கல் மையமாக அமையட்டும்.
தைத் திருநாளில் தைப்பொங்கல் நிகழ்வுகளுடன் மேலதிகமாக தமிழர்களின் பாரம் பரிய விளையாட்டு நிகழ்வுகளாக ஜல்லிக் கட்டு அல்லது ஏறு தழுவல், உறியடித்தல், பட்டம் ஏற்றும் போட்டிகள் என பலதரப்பட்ட போட்டிகளிலும் மக்கள் ஈடுபடுவார்கள்.

இந்த வகையில் இயற்கையோடு ஒன்றிய வாழ்க்கையை உடைய தமிழ் மக்கள் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருவது எமக்கு மகிழ்வைத் தருகின்றது. எமது படித்த வாலிபர்கள் பலர் விவசாயத்தில் ஈடுபட வேண்டும். நவீன தொழில்நுட்ப அறிவுடன் விவசாயத்தில் தன்னிறைவைக் காண எமது படித்த வாலிபர்கள் முன்வரவேண்டும்.

தமிழ் மக்கள் விவசாயத்தின்பால் கொண்டுள்ள நாட்டத்தையும் விவசாயத்தின் மூலம் அவர்கள் பெற்றுக் கொள்கின்ற நன்மைகளையும் கண்ணுற்ற பலர் தமிழ் மக்களின் பூர்வீக நிலங்களை கையகப்படுத்துவதில் குறியாக இருக்கின்றார்களோ என்று எண்ண வேண்டியுள்ளது. விரைவில் இவ்வாறு கை யகப்படுத்தியுள்ளவர்கள் தாம் குடியேறி இருக்கும் காணிகளை மக்களிடம் திரும்பக் கையளிப்பார்கள் என்று எதிர்பார்க்கின்றேன்.

எது எவ்வாறு இருப்பினும் எமது மக்களின் விவசாய நிலங்கள் முழுமையாகப் பயன்படுத்தப்பட வேண்டும். எமது தரிசு நிலங்களில் ஒரு சிறு பகுதிகூட விவசாய  முயற்சிகளுக்கு பயன்படுத்தாது எஞ்சியிருக்கக் கூடாது. ஏதாவது காரணங்களால் சில நிலங்களில் விவசாய நடவடிக்கைகள் தொடர முடியாத விடத்து அக் காணிகளை தற்காலிகமாகவேனும் விவசாய அமைச்சு பொறுப் பேற்று அந் நிலங்களில் தோதான விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடுவதன் மூலம் எமது உற்பத்திகள் அதிகரிப்பதுடன் நிலங்களும் பாதுகாக்கப்படும்.

எவ்வாறு மழைநீர் ஒருதுளி கூட கடலை அடையாது சேமிக்கப்பட வேண்டுமோ தரிசு நிலங்களும் உரியவாறு பயன்படுத்தாமல் வைத்திருக்கப்படாது நாம் பார்த்துக் கொள்ள வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

ஊறணி பகுதியில் விரைவில் காணி விடுவிப்பு....


வலி-வடக்கு ஊறணி பகுதியில் உள்ள பொதுமக்களின் ஒருபகுதி நிலம் இந்த மாத இறுதிக்குள் விடுவி க்கப்படக்கூடிய சாத்தியக்கூறுகள் இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
வலி வடக்கு இராணுவ உயர் பாதுகாப்பு வலயத்துக்குட்பட்ட காணிகள் சிறிது சிறிதாக விடுவிக்கப்பட்டு வருகின்ற நிலையில்  மக்கள் தமது வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கு ஏற்றவகையில் தமது நிலங் களை விடுவிக்குமாறு கோரி வருகின்றனர்.

இந்த நிலையில் அண்மையில் ஊறணி இறங்குதுறைக்கு அருகில் உள்ள கடற்கரைப்பகுதி மற்றும் அதனுடன் கூடிய 2 ஏக்கர் காணி  படையினரால் விடுவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் குறித்த பகுதியில் தாம் தொழில் செய்ய முடியாது என்றும் தமது இறங்குதுறை மற்றும் அதனை அண்டிய நிலங்களை விடுவித்தால் மாத்திரமே தாம் மீன்பிடித் தொழிலை மேற்கொள்ள முடியும் என மக்கள் தொடர்ச்சியாக கோரிக்கைகளை முன்வைத்த வண்ணம் உள்ளனர்.

அந்த வகையில் குறித்த பகுதிகளை விரைவில் விடுவிக்க வேண்டும் என இராணுவத்திடம் அரச அதிகாரிகள் கோரிக்கை விடுத்தனையடுத்து இம்மாத இறுதிக்குள் ஊறணி இறங்குதுறை மற்றும் அதனையண்டிய நிலம் விடுவிப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக உயர் அதிகாரிகள் தெரிவித்து ள்ளனர்.                                   

மன்னார் இளைஞர்களும்..... இனி மறையாது என்றும் உரிமை....ஜல்லிக்கட்டு தமிழனின் வரலாறு


ஆண்டுகள் பல நூறு
ஆண்ட தமிழனின் வரலாறு
அடங்கா ஏறு தழுவு
அடிமை வாழ்வை கழுவு

ஜல்லிக்கட்டு ஜல்லிக்கட்டு
தமிழனின் வீர விளையாட்டு
தடையாக பீட்டா.... பொட்டா
சட்டம் போட்டா-அத்தனைக்கும்
தமிழா காட்டு டாட்டா

புல்லுக்கட்டு இல்ல
மல்லுக்கட்டு இல்ல
ஜல்லிக்கட்டு ஜல்லிக்கட்டு
வெல்ல இளைஞர் கூட்டு
சொல்லக்கேட்டு பிறக்கும் உரிமையின் பாட்டு

தீர்வு கேட்டா கிடைக்காதுடா- நீ
தீயானால்  எதுவும் நிலைக்காதுடா
தீமை தமிழன் மீது உரிமை கொள்ள
தீரண்டு வந்த இளைஞர் சிரசு
திணறியது இந்திய அரசு

தமிழனுக்கு தனியாக இல்லை நாடு
தனது உரிமை காக்க போராடு
தலைசாய்த்து விடாதே-எதற்கும்
தமிழர் வாழ்வில் மாற்றம் பிறக்கும் வரைக்கும்

தரணி யே பாடும் தமிழர் பரணி
தனித்தனியாக இல்லாமல்
தனக்கென நில்லாமல் கூட்டணி
தடைகள் எல்லாம் தகர்த்தெறி

தமிழினத்தின் தனித்துவம் அறி
தமிழர் மீது வைக்கும் பொறி
தசவதாரம் எடுத்து பகை முறி
தன்மானத்தோடு தனிநாடே குறி

தமிழ் நாட்டிற்கு ஆதரவு-இது
தமிழர் மரபு
தரிணியெங்கும் தமிழர் இணைவு-இது ஈழ
தலைவன் கனவு---
இப்போ...தான் ஆரம்பம்
இனி எப்போதும் .........

மன்னார்   இளைஞர்களும்
மகத்தான தொடக்கம்
மண்ணுக்கும் பெருமை-இனி
மறையாது என்றும் உரிமை.....

கவிஞர்-வை-கஜேந்திரன்-


"கொல்லேற்றுக் கோடஞ்சுவானை மறுமையும் புல்லாளே ஆய மகள்-கலித்தொகை" அழிந்து வரும் தமிழனின் கலாச்சார வரலாற்றில் மிச்சம் இருப்பது ஜல்லிகட்டு மட்டும் தான்

ஜல்லிக்கட்டு வரலாறு

ஏறுதழுவுதல்
பல நூற்றாண்டுகளை தாண்டி நிற்க்கும் என் இனத்தின் அடையாளம்.


ஏறுதழுவல் அல்லது சல்லிக்கட்டு (ஜல்லிக்கட்டு) என்பது தமிழர்களில் தொன்மை குடிகளான ஆயர்களின் (இடையர்,யாதவர்) மரபுவழி குல விளையாட்டுக்களில் ஒன்றாகும்.

ஏறு என்பது காளை மாட்டைக் குறிக்கும். மாட்டை மனிதர்கள் அடக்குவது அல்லது கொம்பைப் பிடித்து வீழ்த்துவதான விளையாட்டு.

தமிழர்களின் வீர விளையாட்டுக்களில் ஒன்றாகக் கருதப்படும் இவ்விளையாட்டு கோனார்கள் எனப்படும் ஆயர்கள் (இடையர்) அதிகமாக வாழும் இடங்களில் நடத்தப்படுகின்றது

மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு உலக புகழ் பெற்றது.
கோனார்கள் அதிகமாக வாழும் தென் தமிழகம் மற்றும் வட தமிழகங்களில் இன்றலவும் ஏறுதழுவுதல்(சல்லிக்கட்டு) நடைபெறுகின்றது.

சல்லிக்கட்டு தற்போதய தமிழ்நாட்டில் ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு விதமாக நடைபெறுகிறது. மதுரை அலங்காநல்லூர் போன்ற இடங்களில் வாடிவாசல் வழியாக வெளியேறும் காளைகளை இளைஞர்கள் விரட்டிச் சென்று அதன் திமில் மீது தொங்கியபடி குறிப்பிட்ட தூரம் செல்கிறார்கள்.

வட தமிழகத்தில் வடம் மஞ்சுவிரட்டு என்ற பெயரில், 20 அடி நீளக் கயிற்றால் காளையைக் கட்டி, இருபுறமும் காளையை ஆண்கள் இழுத்துப் பிடிக்க, ஒரு சிலர் மட்டும் அதன் முன்னே நின்று கொம்பில் உள்ள பரிசுப் பணத்தை எடுக்க முயல்கிறார்கள்.

ஆனால் பண்டைய காலத்தில் ஆயர்களின் திருமணதில் கலந்த ஏறுதழுவுதல் தமிழகத்தின் அனைத்து பகுதியிலும் ஒரே விதமாகவே நடந்துள்ளது. பண்டைய தமிழ் நூல்கள் ஏறுதழுவலை ஒரே விதமாக தான் குறிப்பிடுகின்றன.

பெயர்க்காரணம்:
ஜல்லிக்கட்டு என்ற பெயர் தற்காலத்தில் உருவான பெயர் மட்டுமே.
முல்லை நிலத்தில் வாழ்ந்த ஆயர் இன மக்கள் காளையை அடக்குபவனை மணமகனாக தேர்வு செய்யும் முறையை கைவிட பெண்ணிற்க்காக காளையை அடக்கிய ஆயர் குல ஆடவர்கள் சல்லிக்காசு காளை அடக்க ஆரம்பித்தனர்.

முல்லை நிலத்தில் வாழ்ந்த ஆயர் இன மக்கள் காளையை அடக்குபவனை மணமகனாக தேர்வு செய்யும் முறையை ஏன் கைவிட்டார்கள் என ஆராயும்போது

1.    திருமணம் ஆன ஆண்கள் போட்டியில் கலந்து கொண்டிருக்கலாம்.
2.    வேறு சமுகத்தை சேர்ந்தவர்களும் கலந்து கோள்ளமுயற்ச்சி செய்திருக்கலாம்.
 சல்லி என்பது விழாவின் போது மாட்டின் கழுத்தில் கட்டப்படுகிற வளையத்தினைக் குறிக்கும். புளியங் கம்பினால் வளையம் செய்து காளையின் கழுத்தில் அணியும் வழக்கம் தற்போதும் வழக்கத்தில் உள்ளது. மேலும் 50 ஆண்டுகளுக்கு முன்பு புழக்கத்தில் இருந்த 'சல்லிக் காசு' என்னும் இந்திய நாணயங்களை துணியில் வைத்து மாட்டின் கொம்புகளில் கட்டிவிடப்படும் பழக்கம் இருந்தது. மாட்டை அணையும் வீரருக்கு அந்த பணமுடிப்பு சொந்தமாகும். இந்தப் பழக்கம் பிற்காலத்தில் 'சல்லிக்கட்டு' என்று மாறியது. பேச்சு வழக்கில் அது திரிந்து 'ஜல்லிக்கட்டு' என்று ஆனது என்றும் கூறப்படுகிறது.ஆயர்களின் வீரம்:

சிந்துவெளி நாகரித்திலும் ஏறுதழுவல்

பழந்தமிழ் இலக்கியங்களிலும் சிந்துவெளி நாகரித்திலும் ஏறுதழுவல் நிகழ்ந்ததற்கான சான்றுகள் உள்ளன. ஏறு தழுவுதல் (மஞ்சு விரட்டுதல்) என்ற சொல் பழந்தமிழ் இலக்கியங்களில் காளையை அடக்கும் வீர விளையாட்டின் பெயராகப் பயின்று வருகிறது. கொல்லக் கூடிய காளையைத் தழுவிப் போரிட்டு அடக்குவதால் ‘கொல்லேறு தழுவுதல்’ என்றும் சிறப்பித்துக் கூறப்படுகிறது. புது தில்லி தேசியக் கண்காட்சியகத்தில் பாதுகாக்கப்படுகின்ற சிந்துவெளி நாகரிகம் சார்ந்த முத்திரை ஒன்றில் ஒரு காளை உருவமும் அதை அடக்க முயலும் வீரரை அக்காளை தூக்கி எறிவதும் உயிரோட்டமான விதத்தில் சித்தரிக்கப்பட்டுள்ளது. இதிலிருந்து கி.மு. 2000 ஆண்டு அளவிலேயே ஏறுதழுவல் வழக்கத்தில் இருந்தது என்று ஐராவதம் மகாதேவன் போன்ற அறிஞர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்

கலித்தொகை, பெரும்பாணாற்றுப்படை என பரவலான இலக்கிய படைப்புகளில் ஏறு தழுவுதலை பற்றிய செய்திகள் உள்ளன. ஏறு தழுவுவது வீரத்தின் அடையாளமாக மட்டுமின்றி, திருமணத்துக்கான முன்முயற்சியாகவும் முல்லைக்கலியில் பேசப்படுகிறது. வேட்டையிலும் போரிலும் விலங்குகளை அடக்கும் பயிற்சியாகவும் அது கருதப்படுகிறது. ஆயர் குலத்தவர்கள் தான் ஏறு தழுவுதலை வாழ்வியல் பண்பாடாக செம்மைப்படுத்தி இருக்கின்றனர்.


அக்காலத்தில் மண் அசையா சொத்து. செல்வம் என பெயர் பெற்ற ‘மாடு’ அசையும் சொத்து. எதிரியின் இடத்தில் புகுந்து மாட்டு மந்தையை (ஆநிரை) கவர்வதே வம்புக்கிழுக்கும் யுத்த தந்திரம். ஆநிரை கவர்வோரும், அதை மீட்போரும் காளைகளை அடக்க வேண்டியது கட்டாயம் என்பதால் ஆறலை கள்வர்களும் அரண்மனை வீரர்களான மறவர்களும் அக்கலையில் தேர்ச்சி பெற்றிருந்தனர். முல்லை நிலத்தவரை தவிர வேறு எந்த நிலத்தவரும் ஏறு தழுவியதாக எந்த செய்தியும் இலக்கியத்தில் இல்லை என்றாலும் இது தமிழர்களின் துப்பண்பாடாகவே அறியப்பட்டுள்ளது.

ஸ்பெயின் உள்ளிட்ட உலகின் சில நாடுகளில் எருது அடக்கும் விழாக்கள் நடக்கின்றன. ஆனால் அவை விளையாட்டாகவே நடக்கிறது. கலாச்சாரத்தின் அல்லது வாழ்விய லின் வெளிப்பாடாக விளங்கவில்லை. முற்காலத்தில் மாட்டின் கழுத்தில் புளியம் விளாறை சுற்றியிருப்பார்கள். இதை சல்லி என்பர். பிற்காலத்தில் மாட்டின் கொம்புகளில் பரிசுக்காக காசு களை கட்டியிருப்பர். இதை ஜல்லி என்பர். கழுத்தில் கட்டிய மணிகளை வைத்தோ, கொம்புகளில் கட்டிய பரிசுப்பணத்தை வைத்தோ சல்லிக்கட்டு அல்லது ஜல்லிக்கட்டு என பிற்காலத்தில் பெயர் பெற்றாலும் ஏறு தழுவுதல், மஞ்சு விரட்டு, எருதுப்பிடி போன்றவையே இந்த விளையாட்டின் முந் தைய பெயர்கள்.

ஏறு தழுவுதல் வீறுடைய ஏறு முல்லை நிலத்தில் வளமான புல்லுண்டு. அதனை வயிறார மேய்ந்து மாடுகள் அழகிய மேனி பெற்று விளங்கும். அந் நிலத்தில் வாழும் ஆயர்க்கு அவைகளே அரும்பெருஞ் செல்வம். மாடுகளில் ஆண்மையுடையது எருது. அதனை ஏறு என்றும், காளை என்றும் கூறுவார். வீறுடைய ஏறுகள் கடும் புலியையும் நேர நின்று தாகும்; வலிய கொம்புகளால் அதன் உடலைப் பீரிக் கொல்லும். இத்தன்மை வாய்ந்த எருதுகளைக் கொல்லேறு என்றும், மாக்காளை என்றும் தமிழ் நாட்டார் போற்றுவர்.


மஞ்செனத் திரண்ட மேனி வாய்ந்த மாக்காளை களைக் கண்டு ஆயர் குலத்து இளைஞர் அஞ்சுவதில்லை; அவற்றின் கொட்டத்தை அடக்க மார்தட்டி நிற்பர். ஏறுகோள் என்பது அவர்க்குகந்த வீர விளையாட்டு. அக் காட்சி நிகழும் களத்தைச் சுற்றி ஆடவரும் பெண்டிரும் ஆர்வத்தோடு நிற்பர். செல்வச் சிறுவர் உயர்ந்த பரண்களில் அமர்ந்திருப்பர். ஏறுகளுடன் போராடுவதற்கு மிடுக்குடைய இளைஞர்கள் ஆடையை இறுக்கிக் கட்டி முறுக்காக நிற்பர். அப்போது முரசு அதிரும். பம்பை முழங்கும். கொழுமையுற்ற காளைகள் தொழுவிலிருந்து ஒவ்வொன்றாக வெளிப்படும். களத்திலுள்ள கூட்டத்தைக் கண்டு கனைத்து ஓடிவரும் ஒரு காளை; கலைந்து பாயும் ஒரு காளை; தலை நிமிர்ந்து, திமில் அசைத்து, எதிரியின் வரவு நோக்கி நிற்கும் ஒரு காளை. அவற்றின்மீது மண்டுவர் ஆயர்குல மைந்தர். கொம்பிலே உள்ளது காளையின் தெம்பு என்றறிந்து அதனையே குறிக்கொண்டு செல்வர். வசமாகப் பிடி கிடைத்தால் காளையின் விசையடங்கும்; வீறு ஒடுங்கும்; ஏறு சோர்ந்து விழும்.


காளையின் கொம்பைப் பிடித்தல் ஆண்மை, வாலைப் பிடித்தல் தாழ்மை என்பது தமிழர் கொள்கை. வாலைப் பிடித்தவன் காளையின் காலால் உதைபட்டு மண்ணிடை வீழ்வான். ஆதலால் கொம்பைவிட்டு வாலைப் பற்றுதல் கோழையின் செயல்; தோல்வியின் அறிகுறி. காளைப் போரில் வெற்றி பெற்ற இளைஞரை ஆயர் குலம் வியந்து நோக்கும்; இள நங்கையர் கண்கள் நயந்து பார்க்கும்.


ஏறுடன் போராட முனைவோர் எல்லாம் வெற்றி பெறுவதில்லை. கொம்பை நாடிச் சென்ற இடத்தில் தீங்கு விளைதலும் உண்டு. பிடி தப்பினால் அடிபட்டு விழுவர். எக்கசக்கமாய் அகப்படாமல் இடர்ப்படுவர்; காளையின் கொம்புகளால் குத்துண்டு குடலறுந்து குருதி வடிப்பர். இங்ஙனம் ஈனமுற்ற இளைஞர் நிலை கண்டு ஆயர் வருந்துவர்; ஆர்வமொழிகளால் அவர் துயரத்தை ஆற்றித் தேற்றுவர். வெற்றி பெற்ற காளையும் வீழ்ந்த இளைஞரருகே வெம்மை நீத்து வாடி நிற்கும். பேராண்மையின் அணியாகிய ஏறாண்மை கண்டு ஆயர்குல வீரர் அகங்களிப்பர்.


தமிழர் திருநாளாம் பொங்கலையொட்டி பல ஊர்களில் இவ்விளையாட்டு நடத்தப்படுகின்றது. இதைக்காண வெளி மாநிலங்களிலிருந்தும், வெளி நாடுகளிலிருந்தும் ஏராளமானோர் தமிழகத்திற்கு வருகை தருகின்றனர். வேறு சங்க நூல்களில் காணப்பெறாத ஏறுதழுவலைக் கலித்தொகை மட்டுமே குறிப்பிடுகின்றது. முல்லைக் கலியில் உள்ள பதினேழு பாடல்களில், முதல் ஏழு பாடல்கள் ஏறுதழுவலைப் பற்றிக் கூறுகின்றன.

முல்லை நிலத்தில் வாழ்ந்த செல்வப் பெருங்குடி மக்கள் தங்கள் மந்தையில் காளைக் கன்று ஒன்றைத் தனியே வளர்ப்பார்கள். இதற்குத் தனியாக போர்ப் பயிற்சி கொடுத்து ஏறுதழுவலுக்குப் பயன்படுத்துவார்கள். தங்களின் வீட்டில் வளரும் மகளுக்கு பருவம் வந்தவூடன் காளையை அடக்கி வெற்றி கொள்ளும் காதலனுக்கு மணம் முடித்து வைப்பார்கள். அன்றைய மகளிர் ‘கொல்லேற்றின் கொம்புக்கு அஞ்சுகிறவனை மறுமையிலும் ஆயமகள் தழுவமாட்டாள், என்று சூளுரைத்திருக்கின்றனா;.

காதலும் வீரமும் தமிழா தம் இரு கண்களாக இணைந்து நிற்பன. இந்த இணைப்பை முல்லைக் கலியில் பெரிதும் காணலாம். “ஆயர்களின் வீரத்தையூம் அஞ்சாமையையூம் எடுத்துக்காட்டும் ஏறுதழுவல் என்னும் முல்லை நில வழக்கத்தை முல்லைக்கலி மட்டுமே விளக்கமாகக் கூறுகின்றது. பிற சங்க நூல்கள் கூறவில்லை. ஆகவே கலித்தொகையில் முல்லைக்கலி புதுமையானது. கிரேக்க நாட்டில் நடைபெற்ற வீர விளையாட்டுகளில் ஒன்றான பொன் நீர் நாய்ப் போட்டியைப் பற்றிய பாடல்கள் ஏறுதழுவலைப் பாடும் முல்லைக் கலிப் பாடல்கள் போன்றுள்ளன எனக் கருதப்படுகின்றது.”1

பண்பாட்டுத் திருவிழாவாகவும், மக்களின் சமயம் சார்ந்த திருவிழாவாகவும், இளைஞர்களின் வீர உணர்வை நினைவுகூரும் விழாவாகவும் நடைபெறும் ஏறுதழுவுதல் பற்றி இலக்கியங்களில் இடம்பெறும் செய்திகளை இங்கு நோக்குவோம்.


பழந்தமிழ் நூலான கலித்தொகையின் முல்லைக்கலியில் இடம்பெறும் பாடல்களில் ஏறுதழுவுதல் சிறப்பாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. மலைபடுகடாம் நூலிலும் (330-335), பட்டினப்பாலையிலும், சிலப்பதிகாரத்திலும் ஏறு தழுவுதல் பற்றிய பல குறிப்புகள் உள்ளன.

முல்லைநில மக்களும் தங்கள் நிலங்களில் உள்ள வலிமை வாய்ந்த எருதுகளை ஒன்றுடன் ஒன்று பொரும்படியாகச் செய்து ஆரவாரம் செய்வர். இவ்வெருதுகளின் வெற்றியைத் தங்கள் வெற்றியாக எண்ணி மகிழ்வர். இதனை, 'இனத்திற் றீர்ந்த துளங்கிமி னல்லேறு மலைத்தலை வந்த மரையான் கதழ்விடை மாறா மைந்தின் ஊறுபடத்தாக்கிக் கோவலர் குறவரோ டொருங்கியைந் தார்ப்ப வள்ளிதழ்க் குளவியுங் குறிஞ்சியுங் குழைய நல்லேறு பொரூஉம் கல்லென் கம்பலை' (மலை.330-335) என மலைபடுகடாம் நூல் குறிப்பிடும்.


'இனத்திற் றீர்ந்த துளங்கிமி னல்லேறு
மலைத்தலை வந்த மரையான் கதழ்விடை
மாறா மைந்தின் ஊறுபடத்தாக்கிக்
கோவலர் குறவரோ டொருங்கியைந் தார்ப்ப
வள்ளிதழ்க் குளவியுங் குறிஞ்சியுங் குழைய
நல்லேறு பொரூஉம் கல்லென் கம்பலை' (மலை.330-335)'

 என மலைபடுகடாம் நூல் குறிப்பிடும்.


வளமுடைய இளைய காளையை அடக்கி, ஏறியவருக்கு உரியவள் இம் முல்லை மலரை அணிந்துள்ள மென்மையான கூந்தலையுடையவள் என ஆய்ச்சியர்கள் ஆடிப்பாடுவதைச் சிலப்பதிகாரம்,


'மல்லல் மழவிடை ஊர்ந்தாற்கு உரியள்.இக் முல்லையம் பூங்குழல் தான்' (சிலம்பு.ஆய்ச்சி. கொளு.8) என்று குறிப்பிடும்.


கலித்தொகையின் முல்லைக்கலியில் இடபெறும் பகுதியில் மாடுகளின் நிறம், மாடுகளின் வகை, மாடுகளின் வீரம், அதனை அடக்கும் இளைஞர்களின் செயல், பரண்மீது அமர்ந்து ஏறு தழுவு தலைப் பார்க்கும் பெண்களின் பேச்சுகள், பெண்களைப் பெற்ற பெற்றோர்களின் இயல்பு யாவும் சிறபாகக் காட்டப்பட்டுள்ளன. ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ஒரு ஒழுங்கு முறைக்குள் வந்து விட்ட இவ் ஏறுதழுவுதல் நிகழ்ச்சி அதற்கும் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தோற்றம் பெற்றிருக்கவேண்டும்.பிடவம்பூ, செங்காந்தள்பூ, காயாம்பூ உள்ளிட்ட மலர்களை அணிந்த ஆயர்கள் தம் காளைகளை அடக்குபவர்களுக்குத் தம் மகளைத் தருவதாக உறுதியளித்துச் சிவபெருமானின் குந்தாலிப்படை போன்று மாட்டின் கொம்புகளைக் கூர்மையாகச் சீவினர். அவ் எருதுகள் இடிஒலி போல முழக்க மிட்டுத் தொழுவுக்கு வந்தன. அந்த எருதுகளைத் தழுவியவருக்கு அளிப்பதாகச் சொன்ன மகளிர் வரிசையாய் நிற்பர். அல்லது பரண்மீது அமர்ந்து பார்ப்பர். ஏறு தழுவதற்கு முன்பாக அத்தொழிலில் ஈடுபடும் இளைஞர்கள் நீர்த்துறைகளிலும், ஆலமரத்தின் கீழும், மாமரத்தின் கீழும் உள்ள தெய்வங்களை வணங்கி முறைப்படித் தொழுவில் பாய்ந்து காளைகளை அடக்குவர். அவ்வாறு அடக்க முற்படுபவனின் மார்பைக் காளைகள் குத்திக்கிழிப்பது உண்டு.


அக்காட்சி பாரதக் கதையில் திரொளபதையின் கூந்தலைத் தொட்ட துச்சாதனனின் மார்பைப் பிளந்த வீமனைப்போல் இருந்தது என்று ஏறு தழுவும் காட்சி முல்லைக்கலியில் விளக்கப்பட்டுள்ளது. பல வகை காளை மாடுகள் ஓரிடத்தில் (பட்டி) அடைக்கப்பட்டு, பின்பு மாடுபிடிக்க விடப்படும். அவ்வாறு அடைக்கப்படிருந்த பல மாடுகளின் காட்சி ஒரு குகையில் சிங்கம், குதிரை, ஆண் யானை, முதலை முதலியவற்றை ஒரே இடத்தில் அடைத்தால் ஏற்படும் நிலைபோல பட்டியில் இருந்தது எனச் சங்க இலக்கியப் புலவன் குறிப்பிட்டுள்ளான். ஒரு காளைமாடு இளைஞன் ஒருவனைக் கொம்பால் குத்துகிறது. அவன்குடல் சரிந்து வெளி வருகிறது. அவற்றை அவன் எடுத்து வயிற்றில் இடுகின்றான்; வேறொரு காளை மாட்டில் தொத்திக் கிடப்பவன் காளைமாட்டின் மேல் இடப்பட்ட மாலைபோல் இருந்தான் எனவும் குறிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு பலரை மாடுகள் குத்திக் கிழிப்பாதல் மாடுபிடி களம் குருதிக் கறையுடனும் மரண ஓலத்துடன் விளங்கித் தோன்றியுள்ளது. இது துரியோதனன் உள்ளிட்டவரைக் காவுகொண்ட படுகளம் போல் இருந்தது என(104-4) ஒரு பாடல் குறிப்பிடுகிறது.

ஆயமகன் ஆயமகளை மணமுடிக்க வேண்டுமானால் கொடிய போரேற்றைத் தழுவி வெற்றி பெற வேண்டும். இல்லையேல் இவள் அழகு மேனியைத் தீண்ட இயலாது என்பதை,

'ஓஓ! இவள்இ ‘பொருபுகல் நல்லேறு கொள்பவர் அல்லால்,
திருமா மெய் தீண்டலர் என்று, கருமமா,
எல்லாரும் கேட்ப அறைந்து, எப்பொழுதும்
சொல்லால் தரப்பட் டவள்.2'

என்னும் வரிகள் விளக்குகின்றன. பசுத்திரளை உடைய ஆயர் மகனுக்கு தலைவியை மணம் முடிக்க பெற்றோர் எண்ணினர். தான் விரும்பிய தலைவனோ செங்காhpக் கொம்பிடையில் புகுந்து தழுவி வெற்றி கொண்டுவிட்டான். தலைவியின் மணம் உறுதியாகிவிட்டதை,


'இன்று எவன், என்னை எமர் கொடுப்பது-அன்று, அவன்
மிக்குத்தன் மேற்சென்ற செங்காரிக் கோட்டிடைப்
புக்கக்கால் புக்கது, என் நெஞ்சு!.3 '

என்ற பாடல் வரிகள் உணா;த்துகின்றன. ‘ஏறுகொள்ள வல்லார் என்னைப் போன்றவர் எவரும் இலர் என வீரம் பேசும் பொதுவன் தலைவிக்கு ஒருநாள் உறவினன் ஆகாமற் போவதில்லை. அத்தலைவனைக் கண்டு கண்களும் காதற் பயிhpனை வளர்க்கிறதாம் தலைவிக்கு. இதை,

‘கோளாளா என்ஒப்பார் இல்’ என நம்மானுள்,
தாளாண்மை கூறும் பொதுவன், நமக்கு ஒருநாள்,
கோளாளன் ஆகாமை இல்லை; அவற்கண்டு
வேளாண்மை செய்தன கண்இ4

என்னும் பாடல் வரிகள் புலப்படுத்துகின்றன.

மெல்லிணா;க் கொன்றையூம், மென்மலர்க் காயாவூம்,
புல்லிலை வெட்சியூம், பிடவூம், தளவூம்,
குல்லையூம், குருந்தும், கோடலும், பாங்கரும்-
கல்லவூம், கடத்தவூம்- கமழ் கண்ணி மலைந்தனர்.5

இவ்வாறு பல மலர்களைச் சூடி ஆயா; இளைஞர்கள் விரைந்து வந்து ஏறு தழுவூதலைக் காண விரும்பிய ஆயமகளிர் பலரும் பரண்களில் முற்படவே வந்து அமர்ந்தனர்.

'முல்லை முகையூம் முருந்தும் நிறைத்தன்ன
பல்லா, பெருமழைக் கண்ணா, மடம் சேர்ந்த
சொல்லா, சுடரும் கனங்குழைக் காதினர்.6'


இவ்வாறு ஆய மகளிரும் ஏறுதழுவலைக் காண ஆர்வம் காட்டியூள்ளனர். ஏறுதழுவி வென்ற வீரனையே மணக்கவூம் விரும்பினர்.கெல்லேற்றுக்கு அஞ்சுகின்றவனை ஆயமகள் தழுவ விரும்பவில்லை உயிருக்குப் பயந்து ஏறுதழுவாதிருக்கும் ஆயர் இளைஞரை யாரும் விரும்புவதில்லை. தாம் காதலிக்கும் பெண்ணின் முலையிடை போலக் கருதி, ஆர்வமுடன் வீழ்ந்து தழுவி வெற்றியடைபவர்களையே பெற்றோர் தம் மகளுக்கு ஏற்றவனகாக் கருதுவார்கள் என்பதை,"கொல்லேற்றுக் கோடஞ்சுவாணை மறுமையூம்
புல்லாளே, ஆய மகள்,
அஞ்சார் கொலையேறு கொள்பவர் அல்லதை,
நெஞ்சிலார் தோய்தற்கு அரிய-உயிர் துறந்து-
நைவாரா ஆயமகள் தோள்,
வளியா அறியா உயிர், காவல் கொண்டு,
நளிவாய் மருப்பஞ்சும் நெஞ்சினார் தோய்தற்கு
எளியவோ, ஆயமகள் தோள்?
விலைவேண்டார் எம்மினத்து ஆயர் மகளிர்-
கொலையேற்றுக் கோட்டிடைத், தாம்வீழ்வர் மார்பின்
முல்லையிடைப் போலப், புகின்.
ஆங்கு: குரவை தழீ, யாம், மரபுளி பாடி, 7"என்னும் வரிகள் புலப்படுத்துகின்றன.

சான்றெண் குறிப்புகள்
1. கலித்தொகைஇ பா. 148-149.
2. மேலது. பா. 101 :9-12.
3. மேலது பா. 105:66-68.
4. மேலது பா. 101:43-46.
5. மேலது பா. 103:1-4.
6. மேலது பா. 103:6-8.
7. மேலது பா. 103:63-74.

வீரத்தை கூட்டும் குரவை கூத்து
 அக்காலத்தில் ஏறு தழுவும் நிகழ்ச்சிக்கு முந்தைய நாள் மாலையிலோ, பிந்தைய நாள் மாலையிலோ குரவை கூத்து நடக்கும். இதில் ஆயர் குல ஆண்களும், பெண்களும் இணைந்து ஆடுவர். ஆயர் கன்னியர் பாடும் பாடல் ஏறு தழுவப்போகும் தன் காதலனை உசுப்புவது போலவோ, ஏறு த ழுவி வென்றவனை புகழ்வது போலவோ அமைந்திருக்கும்.
புலிக்குளம் காளை
புலிக்குளம் என்னும் ஊர் சிவகங்கை மாவட்டத்தில் உள்ளது. ஜல்லிகட்டுக்கு என்று பிரத்தேகமாக வளர்க்கப்படும் காளையினம் புலிக்குளம் . இது காங்கேயம் காளைகளை விட மிகவும் ஆக்ரோசமானது. புலிக்குளம் காளைகளை பாரம்பரிய கால்நடை வளர்பாளர்களான கோனார்களே (ஆயர்) வளர்த்து வருகின்றனர். உலகளவில் இந்திய நாட்டின பசுக்களின் பாலே அதிக நோய் எதிர்ப்பு சக்தி கொண்டுள்ளதாக அறியப்பட்டுள்ளது. அதிலும் புலிக்குளம் இன பசுக்களின் பாலே சிறந்தது என்று விஞ்ஞானிகளால் நிருபிக்கப்பட்டுள்ளது

கோட்பாடு:
1.    காளைக்கொம்புக்கு அஞ்சுபவனை ஆயர்குலப் பெண் தழுவமாட்டாள்.
2.    ஆயர் மணப்பெண்ணுக்கு விலை வேண்டார்
3.    அடக்கியவனுக்குப் பெண்ணைக் கொடுப்பர்
செய்திகள்:
1.    ஏறு கொள்ளும் விழா நடைபெறும் இடத்தின் பெயர் தொழூஉ (தொழுவம்).
2.    இந்தப் பாணிவிழா நடக்கப்போவதை முதல்நாளே பறை அறைந்து அறிவிப்பர். 
3.    ஏறு தழுவப்போகும் ஏந்தல் தன் சுற்றத்தாருக்குச் சொல்லி அனுப்புவான்
4.    ஏறு தழுவுவதற்கு முதல்நாள் இரவு மகளிரும் மைந்தரும் சேர்ந்து குரவை ஆடுவர்
5.    கோளாளர் என் ஒப்பார் இல் – எனப் பொதுவன் வஞ்சினம் கூறுதல் உண்டு.
6.    புண்பட்ட அனைவரையும் புணர்குறி செய்து அழைத்துக்கொண்டு பொதுமகளிர் பொழிலுக்குச் செல்வர்.
7.    புண்பட்டவனை எல்லாரும் போற்றிப் பாடுவர்

பழக்கம்:
1.    பிடவம், கோடல், காயா, வெட்சி, தளவம், குல்லை, குருந்து, முதலான மலர்க்கண்ணி சூடிக்கொண்டு ஏறுகோள் முரண்தலையில் ஈடுபடுவர்.
2.    காளைகளுக்கு உரிய மகளிர் காளைகளோடு அணிவகுத்து நிற்பர்
3.    இந்தக் காளையை அடக்குபவனுக்கு இவள் உரியள் என்பர்
4.    துறை (இந்திரன்), ஆலம் (சிவன்). மராஅம் (முருகன்) ஆகியவற்றைத் தொழுதபின் தொழுவுக்குச் செல்வர்
காளைகள்:
1.    சிவன் கணிச்சி போல் காளைகளின் கொம்பு சீவி விடப்படும்
2.    வெண்கால்-காரி, புள்ளி-வெள்ளை, சேய் (செவலைக்காளை), குரால் (செம்புள்ளிக்காளை) முதலான காளைகள் பாடலில் குறிப்பிடப்படுகின்றன
உவமைகள்:
1.    போரில் காயம் பட்டு வீழ்ந்தவனைப் போரிடுவதற்கு ‘ஒவ்வான்’ என விட்டுச் செல்லும் மறவன் போல ஒரு காளை கீழே விழுந்தவனை விட்டுச் சென்றது.
2.    ஒரு காளை பொதுவனைக் கொம்பால் குத்தி உழலைமரம் போலச் சுழற்றியது
3.    பாஞ்சாலியின் கூந்தலைப் பற்றியவன் நெஞ்சைப் பிளப்பதுபோல் ஒரு காளை நெஞ்சில் குத்தித் தூக்கியது
4.    ஏறுகோள் காட்சி ஒன்று நூற்றுவரை அடக்கிய களம் போல இருந்தது
5.    புலியும் களிறும் போரிடுவது போல் பொதுவர் காளையைத் தழுவினர்
6.    அந்திக் கடவுள் எருமையை இடந்து கூளிப் பசியைத் தீர்ப்பவன் போல ஒரு காளை குத்தியது.
7.    இருளில் வந்து தந்தையைக் கொன்றவனைப் போல ஒரு காளை குத்தியது.
8.    சிவன் கணிச்சியில் தொங்கும் மாலை போல ஒரு காளை ஒருவன் குடலை மாட்டித் தூக்கியது.
9.    பட்டம் விடுபவன் நூலைச் சுற்றுவது போலக் குடல் சரிந்தவன் தன் குடலை வயிற்றுக்குள் சுருட்டிக்கொண்டான்.
10.    கூந்தல்-குதிரையை அடக்கியவன் போல ஒருவன் காளையை அடக்கினான்.
11.    வெள்ளைக்காளையை அடக்குபவன் பாம்பு கௌவிய நிலாவை விடுவிக்கும் சிவன் போல் காணப்பட்டான்

காளை நிறத்துக்கு உவமைகள்:
1.    கரிநெற்றிக் காரி – திருமால் வாயில் சங்கு போன்ற நிறம்
2.    செம்மறி வெள்ளை – வெண்ணிறப் பலராமன் மார்பில் ஆரம் போன்ற நிறம்
3.    குரால் – கணிச்சியோன் மணிமிடறு போன்ற நிறம்
4.    புகர் – இந்திரன் கண்கள் போல் புள்ளிகள்
5.    சேய் – சேயோன் போன்ற நிறம்

அடக்கிய முறை
கொம்பைப் பிடித்து அழுத்தல், கழுத்தைப் பிடித்துக்கொண்டு காளையில் மார்பில் தொங்கல், கழுத்தைத் திருகல், இமிழ் என்னும் கொட்டேறியைத் தழுவல், தோளில் ஏறல், நெருக்கிப் பிடித்தல் முதலானவை காளையை அடக்கப் பொதுவர் கையாண்ட உத்திகள்.உலகின் போராட்ட இயக்கங்களுக்கு முன்னோடியாகத் திகழ்ந்தவர் பிரபாகரன்! அனந்தராஜ் புகழாரம்!


தேசியச் சொத்தாக இருக்கின்ற எங்களுடைய தேசியத் தலைவர் பிரபாகரன் வல்வைமண்ணுக்குக் கிடைத்ததொரு முதுசம் மட்டுமல்ல உலக நாடுகள் அனைத்திலுமுள்ளபோராட்ட இயக்கங்களுக்கு முன்னோடியாகத் திகழ்ந்தவர் எனப் புகழாரம் சூட்டினார் யாழ்.வல்வெட்டித்துறையின் முன்னாள் நகர சபைத் தலைவரும், எழுத்தாளருமானகலாபூஷணம் வல்வை ந. அனந்தராஜ்.

கலாபூஷணம் வல்வை ந. அனந்தராஜ் எழுதிய 'வல்வையின் முதுசொம்' தமிழர்களின்வரலாற்று ஆவண நூல் வெளியீட்டு விழா நேற்று வெள்ளிக்கிழமை(20) பிற்பகல்வடமராட்சி வடக்குப் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற போது கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

இன்று வெளியிட்டுள்ள வல்வை முதுசம் நூலில் சேர்ப்பதற்காக வழங்கியிருந்த 14புகைப்படங்கள் உட்பட எட்டுப் பக்கங்களைத் தற்காலிகமாகநீக்கியிருக்கிறார்கள். ஆனால், அவரைப் பற்றிய கருத்துக்கள் பலவிடங்களிலும்வெளிவந்து கொண்டிருக்கின்றன.

நான் பல சந்தர்ப்பங்களில் பிரபாகரனின் நிர்வாகத் திறமையைஅவதானித்திருக்கிறேன். அவரது தலைமைத்துவம், மற்றவர்களை மதிக்கின்ற பண்பு,அநீதிக்காகக் குரல் கொடுக்கின்ற தன்மை என்பன என்னை மிகவும் கவர்ந்தவை.

பருத்தித்துறைக்கும், வல்வெட்டித்துறைக்குமிடையில் வரலாறு பண்பாடு,கலாசாரம், உணவு என அனைத்து வகைகளிலும் நெருங்கிய தொடர்புண்டு. நான்பருத்தித்துறை சித்திவிநாயகர் வித்தியாலயத்தில் எட்டு வருடகாலமாகஅதிபராகவிருந்திருக்கிறேன்.

கடலோடிப் பாரம்பரியம் எந்தெந்த வகைகளில் ஈழத்து மக்களுக்கு ஆதாரமாக விளங்கியதுஎன்பதை நான் பலவிடங்களில் சுட்டிக்காட்டியிருக்கிறேன்.

பிலிப் குணவர்த்தன,டாக்டர் என்.எம்.பெரேரா போன்றவர்கள் பிரிட்டிஷ் அரசுக்கெதிராக மிகப் பெரியஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்த போது கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கின்றநிலையில் அங்கிருந்து தப்பி வந்த போது அவர்களைத் தென்னிந்தியாவிற்கு அழைத்துச்சென்று அங்கே தங்க வைத்து அவர்களுக்குப் பாதுகாப்பையையும் வழங்கியவர்கள்எங்களுடைய கடலோடிகள்.

இதனை இன்னொரு சந்தர்ப்பத்தில் பிலிப் குணவர்த்தனவல்வெட்டித் துறையில் வைத்து வல்வெட்டித் துறை மக்களை நாங்கள் என்றும் மறக்கமாட்டோம் என நினைவு கூர்ந்தார்.

சிங்கள மக்களை இந்த மண்ணிலே வாழ்வதற்கானவழியமைத்துக் கொடுத்தவர்கள் வல்வெட்டித்துறை மக்கள். ஆனால், அதே சிங்கள அரசால்எங்களுடைய மண் அழிக்கப்பட்டு விட்டது.

இரண்டாம் மகாயுத்தத்தில் இலங்கை முழுவதும் பஞ்சத்தில் வாடிய போது வல்வெட்டித் துறைக் கடலோடிகள் தான் வெளிநாடுகளிலிருந்து அரிசி, மா போன்ற பொருட்களை இறக்கிஎல்லோருக்கும் விநியோகம் செய்தவர்கள்.

எங்களுடைய ஆயுதப் போராட்டம் 1977ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட போதும் அதற்குமுன்னரே 1969ம் ஆண்டளவில் வல்வெட்டித்துறை ஆதி கோவிலடியில் ஒரு மிகப் பெரியயுத்தம் இராணுவத்திற்கெதிராக அந்தப் பகுதி மக்களால் முன்னெடுக்கப்பட்டது.

இராணுவத்தின் ஆயுதங்கள் பறிக்கப்பட்டுக் கடலில் வீசப்பட்டது.அதன் பின்னர் அப்போதைய நகரபிதா தலைமையில் வல்வெட்டித்துறை சனசமூகநிலையத்திற்கு முன்னால் இராணுவத்திற்கெதிரான ஆர்ப்பாட்டம் மேற்கொண்ட போதுஅதற்கெதிராக மக்கள் சாத்வீகமான முறையில் போராட்டம் நடாத்திய நிலையில் இலங்கைப்பொலிஸாரும், இராணுவமும் சேர்ந்து அந்த மக்களை அடித்துத் துன்புறுத்திய போதுமுதலாவது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது.

அன்று இளைஞர்களாகவிருந்தஎங்களுக்கு இன்றும் இந்த விடயம் ஞாபகத்திலிருக்கிறது.அன்று எம்மத்தியிலிருந்த வீரம் படிப்படியாக வளர்ச்சியடைந்து தேசிய விடுதலைப்போராட்டத்தின் முக்கிய எழுச்சியாக உருவானது.

அதற்கு வித்திட்டவரும் எங்களுடையதேசியத் தலைவர் பிரபாகரன் எனவும் அவர் தனதுரையில் மேலும் தெரிவித்தார்.

பெரும்பாலான விடயங்கள் எங்களுடைய ஒப்புதல் இல்லாமல் மத்திய அரசாங்கம் செய்கின்றது - சீ.வி. விக்னேஸ்வரன்


வடமாகாணத்தில் மத்திய அரசாங்கம் தம் நல்லெண்ணத்தை காட்டும் ஒரு சில நடவடிக்கைகளையே மேற்கொண்டிருக்கின்றது. அதனை விட மற்றைய பெரும்பாலான விடயங்கள் தாங்கள் நினைப்பதை எங்களின் விருப்பத்தை அறியாமல் எங்கள் மீது திணிப்பதாகவே இருக்கின்றது என வடமாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் அவுஸ்ரேலிய உயர்ஸ்தானிகர் பிறைஸ் ஹச்சீசனிடம் சுட்டிக்காட்டியுள்ளார்.

நெடுந்தீவுக்கான போக்குவரத்து படகு நெடுந்தாரகை நாளைய(20) வெள்ளோட்டம் விடப்படவுள்ள நிலையில் அந்த நிகழ்வு நடைபெற்வுள்ளது.

இதில் கலந்து கொள்வதற்காக யாழ் சென்றிருந்த அவுஸ்ரேலிய உயர்ஸ்தானிகர் பிறைஸ் ஹச்சீசன் இன்று வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனை, அவருடைய இல்லத்தில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

குறித்த சந்திப்பில் பேசப்பட்ட விடயங்கள் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே முதலமைச்சர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில்,முன்னேற்றகரமாக நடைபெற்றிருக்கும் விடயங்கள் தொடர்பாக அவர் என்னிடம் கேள்வி எழுப்பியிருந்தார்.

அதன்போது நான் குறிப்பிட்டது வட மாகாணத்தின் தேவை மதிப்பீட்டை செய்வதற்கு மத்திய அரசாங்கம் இணக்கம் தெரிவித்து அந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை.

குறிப்பாக அதில் ஆசிய அபிவிருத்தி வங்கி, உலக வங்கி, ஐரோப்பிய யூனியன் மற்றும் யு.என்.டீ.பி ஆகிய அமைப்புக்கள் பங்காற்றுகின்றன.

இதேபோன்று, புலம்பெயர்ந்திருக்கும் தமிழ் மக்கள் வடக்கில் முதலீடுகளை செய்யலாம் அதில் ஆட்சேபனை இல்லை என அண்மையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கூறியிருந்தார். அந்த விடயங்கள் முன்னேற்றகரனமாக விடயங்களாக உள்ளன.

ஆனால் பெரும்பாலான மற்றைய விடயங்கள் எங்களுடைய ஒப்புதல் இல்லாமல் மத்திய அரசாங்கம் தாங்கள் நினைத்தால் செய்யும் விடயங்களாகவே இருக்கின்றன என்பதை சுட்டிக்காட்னேன்.

இதேவேளை, அரசியல் ரீதியாக பேசும்போது எழுக தமிழ் மற்றும் தமிழ் மக்கள் பேரவை ஆகியன தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிரானவையா? என அவர் என்னிடம் கேட்டார்.

 அவ்வாறில்லை இவை தமிழ் மக்கள் பேரவையும், எழுக தமிழும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பை வலுப்படுத்துவதற்காகவே என கூறியுள்ளதுடன், தமிழ் மக்கள் பேரவை தேர்தல்களில் போட்டியிடபோவதில்லை என்ற உறுதிப்படுத்தலை அவர்களிடமிருந்து பெற்றதன் பின்னரே நான் தமிழ் மக்கள் பேரவையில் பங்கெடுத்தேன் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

மீண்டும் ஒரு கொடிய யுத்தம் ஏற்பட கூடாதெனில்..


மீண்டும் ஒரு கொடிய யுத்தம் ஏற்பட கூடாதெனில் மக்கள் பெருமையடையும் வகையில் புதிய அரசியல் சாசனத்தை அமைக்க வேண்டும் என எதிர்க்கட்சி தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

திருகோணமலையில் இடம்பெற்ற தைப்பொங்கல் நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

நல்லிணக்கத்தினை நோக்கி நாம் அனைவரும் பயணித்துக்கொண்டு இருக்கின்றோம், இந்த நிலை தொடர வேண்டும் என்றால் நாம் இலங்கையர் என்ற நிலையில் அனைத்து மக்களும் செயற்பட்டு அனைவருக்கும் சாதகமான அரசியல் சாசனத்தினை கொண்டுவர அரசியல் கட்சிகள் மற்றும் தலைவர்கள் ஒன்றுபட்டு செயற்பட வேண்டும்.

நாட்டில் நல்லிணக்கம் அவசியம் எனில் புதிய அரசியல் சாசனம் ஒன்று தேவைப்படுகின்றது. கடந்த காலத்தில் ஏற்பட்ட கொடிய யுத்தம் நிறைவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. அன்று ஏற்பட்ட யுத்தத்தினால் மக்கள் பலர் பாதிப்படைந்துள்ளனர்.

இவ்வாறு வன்முறையோ, கெடுதிகளோ நாட்டில் இனி வரும் காலங்களில் ஏற்படக்கூடாது, அதனை யாரும் விரும்பவும் மாட்டார்கள். அந்த கொடிய யுத்த நிலைமை ஏற்பட என்ன காரணம் என்பதை அனைவரும் உணர வேண்டும்.

இவ்வாறு ஏற்படக்கூடாது எனில் தற்போது அமைக்கப்படவுள்ள அரசியல் சாசனம் மக்கள் ஏற்றுக்கொள்ளும் வகையிலும் பெருமையடையும் விதத்திலும் அமையவேண்டும். இதற்காக அனைத்து மக்களும் ஒன்றாக செயற்பட வேண்டியது அவசியம்.

இந்த வகையில் சாசனம் அமையப்பெற்றால் நாட்டினை பிரிக்கும் அல்லது பிளவடைய செய்யும் நிலைமை ஏற்படாது, அதற்கான முழு முயற்சிகளையும் ஒத்துழைப்பினையும் தாங்கள் தந்துள்ளதாக இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

யாழில் அமைந்துள்ள உலகின் ஒரேயொரு நட்சத்திரக்கோட்டை உங்களுக்கு தெரியுமா?


இலங்கை இராச்சியத்தின் வரலாற்றை 5 வகையாக பிரிக்க முடியும் போர்த்துகேயர் காலம்,ஒல்லாந்தர் காலம், ஆங்கிலேயர் காலம் எனவும் முதலாவது ஈழயுத்தம், இரண்டாவது ஈழ யுத்தம் எனவும் அடையாளப்படுத்தலாம்.

ஆட்சிகள் மாறினாலும் வரலாற்றில் அழிக்க முடியாத கோட்டையாய் பரிணமிக்கின்றது, யாழ் பூமியின் வரலாற்று கதை பேசும் யாழ்ப்பாண கோட்டை.

1621இல் போரத்துகேயர்கள் சங்கிலி செகராச சேகரனை தோற்கடித்து ஆட்சியை கைப்பற்றி கொண்டார்கள். இப்போராட்டத்திற்கு பிலிப் தி ஒலிவேறா என்பவன் தலைமை தாங்கினான்.

தற்போது முத்திரைச்சந்தி தேவாலயம் இருக்கும் இடத்தில் ஆரம்பத்தில் காணப்பட்ட நல்லூர் கோவிலை தரைமட்டமாக்கினான்.

மேலும் ஒலிவேறா யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றிய போது பல கிளர்ச்சிகள் நாட்டில் எழத்தொடங்கின. இதனால் தனது பாதுகாப்புக்காக கோட்டையொன்றை உருவாக்கத் தொடங்கினான். அதற்காக கடலோரப் பிரதேசமொன்றையும் தேர்வு செய்தான்.

தனது வசிப்பிடத்திற்காக மாபெரும் கோட்டையை உருவாக்கத்தொடங்கினான். நல்லூர் கோவிலை உடைத்ததனால் பெறப்பட்ட செங்கற்கள் இதற்கு பயன்படுத்தப்பட்டன.

பின்னர் ஒல்லாந்தர் காலத்தில் இதற்கான திருத்தப்பபணிகள் மேற்கொள்ளப்பட்டு முழுவதுமாக மாற்றியமைக்கப்பட்டது.

இன்றளவில் 400 வருட பழமையான வரலாற்றை கொண்ட இலங்கையின் முதல் கோட்டை எனவும் யாழ்ப்பாண கோட்டையே அடையாளப்படுத்தப்படுகின்றது.

4 பக்கமும் ஒரே அளவைக்கொண்டு சதுர வடிவில் அமைக்கப்பட்ட இக்கோட்டை ஒல்லாந்தர் காலத்தில் நட்சத்திர வடிவமைப்பைக் கொண்டதாக மாற்றியமைக்கப்பட்டது. இதுவே உலகின் முதலாவது நட்சத்திரக்கோட்டை எனவும் அழைக்கப்படுகின்றது.

62 ஏக்கர் பரப்பில் அமைந்துள்ள இக் கோட்டையின் வெளிப்புறச் சுவர்கள் ஒவ்வொன்றும் கீழ்ப்பகுதி 40 அடி அகலமும் 30 அடி உயரமும் கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது.

இவ் வெளிப்புறச் சுவர்களை சுற்றி ஆழமான அகழிகள் காணப்படுகிறன. 4 பக்கமும் பாரிய பீரங்கிகளையும் பாதுகாப்பு தளங்களையும் கற்கோபுரங்களையும் சுரங்கங்களையும் சுவடுகளையும் கொண்டதாகவும் இக்கோட்டை வடிவமைக்கப்பட்டுள்ளது.

கோட்டையின் உட்பகுதியில் நிர்வாக மையங்களும் படைவீரர்களின் இருப்பிடங்களும் ஒல்லாந்த கிறிஸ்தவ ஆலயமும் யாழ்ப்பாணத்தில் ஆளுனர் மாளிகையும் சிறைச்சாலையும் பிற நிர்வாககட்டிடங்களும் காணப்படுகிறன.

அக்காலத்தில் ஒல்லாந்தரின் நிர்வாக மையம் இக்கோட்டையிலேயே முன்னெடுக்கப்பட்டதாக வரலாறுகள் கூறுகின்றன.

1973ஆம் ஆண்டு இலங்கையில் ஏற்பட்ட கலவரத்தின் போது அதன் தலைவர் கைதுசெய்யப்பட்டு இங்கே பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்ததாகவும் கூறப்படுகின்றது. மற்றும் நீதிபதிகள் அரசதலைவர்கள் தங்கும் பாதுகாப்பு மையமாகவும் காணப்பட்டது.

1980 களின் பின் உள்நாட்டுப் போரின் போது இராணுவத் தளமாக காணப்பட்டது.

2009ம் ஆண்டுயுத்த முடிவின் பின் தொல்லியல் திணைக்களம் மற்றும் மரபுரிமைகள் அமைச்சு போன்றவற்றால் பொறுப்பேற்கப்பட்டு நெதர்லாந்து அரசின் நிதியுதவியால்புணர் நிர்மானப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

யாழ்ப்பாண கோட்டையை சிறந்தவரலாற்றுச் சுற்றுலாமையமாக மாற்றுவது மற்றும் இலங்கையின் ஒன்பதாவது கலாச்சார சுற்றுலாமையமாக பிரகடனம் செய்து உலக அரங்கில் பிரகடனப்படுத்துவது அரசின் முக்கிய குறிக்கோளாக கொள்ளப்பட்டிருந்தது.

இந்த வகையில் இம்மையத்தின் புனர்நிர்மாணத்தில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் மற்றும் தேசிய மரபுரிமை நிறுவனம் உள்ளிட்ட பல தரப்பட்ட அமைப்புக்களும் அயராது உழைத்து வருகின்றமையானது, 2018 ஆம் ஆண்டளவில் இக்கோட்டையை இலங்கையின் மரபுரிமையை எடுத்துக்காட்டுவதற்கான ஒரு செயற்திட்டமாகும்.

அந்த வகையில் யாழ்ப்பாண கோட்டை புத்துணர்ச்சி பெற்றால் வரலாற்றில் அழிக்க முடியாத 400 ஆண்டுகளை தாண்டிய உலகின் முதலாவது நட்சத்திரக் கோட்டையாக அமையும் என்பது மட்டும் மறுக்க முடியாத உண்மை.இலங்கை மக்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தவுள்ள இயற்கை!


நாட்டில் ஏற்பட்டுள்ள வறட்சியான காலநிலையில் மாற்றம் ஏற்படவுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

எதிர்வரும் 20ம் திகதியின் பின்னர் இந்த மாற்றத்தை எதிர்பார்க்க முடியும் என திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

இலங்கையை ஊடறுத்து வீசும் காற்றில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக இந்த சாதகமான காலநிலைக்கு வாய்ப்பு உருவாகியுள்ளது.

இதன் காரணமாக எதிர்வரும் நாட்களில் வடக்கு மற்று கிழக்கு மாகாணங்களில் மழை ஏற்பட கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

20ம் திகதி வரையான காலப்பகுதியில் நாட்டின் பல பகுதிகளில் கடும் வறட்சியான காலநிலை நிலவும். எனினும் இரவு வேளைகளில் சில பிரதேசங்களில் குளிரான காலநிலை காணப்படும்.

எனினும் அண்மைய நாட்களாக நுவரெலியா மாவட்டத்தில் அதிகாலை வேளையில் உறைபனியுடனான காலநிலை நிலவுகிறது. இதன்காரணமாக அந்தப் பகுதி மக்கள் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர்.

ஏனைய மாவட்டங்களில் நிலவும் கடும் வறட்சி காரணமாக அனைத்து நீர் நிலைகளும் வரண்டு காணப்படுவதால் விவசாய நடவடிக்கையில் ஈடுபடுவோர் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்கும் நடவடிக்கையில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது. இந்த நடவடிக்கைக்காக முப்படையினரின் உதவியை பெற்றுக்கொள்ளுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


2017 இல் இலங்கையை சூழ்ந்துள்ள பிரச்சினைகள்.. எதிர்வரும் 3 மாதத்தில் பாரிய மாற்றம்!


ஒருவருக்கு தனது 12 வீடுகள் உள்ள ஜோதிட சக்கரத்தில் ராசி நாதன் மறைந்து இருந்தால் கெடு காலம்தான் என்று இந்து மதத்தில் நம்பிக்கை உள்ளவர்கள் அல்லது ஜோதிடத்தில் நம்பிக்கை உள்ளவர்கள் கூறுவார்கள்.

ஆனால் இயற்கை சமநிலை தர்மத்தின்படி ஒருவரது பாவ கணக்கு மற்றும் புண்ணிய கணக்கை விட கூடுதலாக காணப்பட்டால் அவருக்கு பாவ கணக்கு புண்ணிய கணக்கிற்கு சமனாகும் வரை கெடு காலம்தான்.

இப்படி ஒருவருக்கான கெடு காலம் ஜோதிடத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் முழு நாட்டிற்கும் ஏற்படும் கஷ்டங்கள் மற்றும் ஆபத்துக்கள் தனி நபரின் ஜோதிடத்தில் குறிப்பிடப்படாத விடயங்கள் என்றே கூறவேண்டும்.

அடுத்து வரும் 3 மாதங்கள் நாடு, வரலாற்றில் இடம்பெறாத மிக கடுமையான வரட்சியை எதிர்கொள்ளும் என்று அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் அநுர பிரயதர்ஸன யாப்பா தெரிவித்துள்ளார்.

சுத்தமான நீர் அடுத்து வரும் 2 மாதங்களுக்கே உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும் நாட்டிற்கு ஜிஎஸ்பி சலுகை இன்னும் கிடைக்கவில்லை.

வெளிநாட்டு முதலீடுகளின் அளவு மிக குறைவாகவே உள்ளது. சர்வதேச விமான நிலையம் தினமும் 8 மணிநேரம் மூடப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலாத்துறை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. பொருட்களின் விலைகளில் ஏற்றம். வாழ்கைச்செலவு அதிகரிப்பு.

விவசாயிகளின் நெற் செய்கை 1/3 பகுதியால் பாதிப்பு. மாற்று பயிர்களை பயிரிட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. டெங்கு தொல்லை அதிகரிப்பு. அத்துடன் H1N1 இன்வுலவன்சா வைரஸ் தொற்று கண்டியில் ஏற்பட்டுள்ளமை பாரிய அபாயத்தை சுட்டிக்காட்டுகிறது.

இதற்கிடையில் நாட்டில் அரசியல் பலத்தை மாற்றக்கூடிய ஆட்சியை கவிழ்க்க புதிய ஆட்சியை ஏற்படுத்தக்கூடிய ஒரே ஒரு கட்சி ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியாகும் என்று அமைச்சர் நிமல் சிரிபால டி சில்வா தெரிவித்து மக்கள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளார்.

பொலிசாருக்கும் பொது மக்களுக்கும் இடையில் ஒரு முறுகல் நிலை. லொத்தர் டிக்கட் விற்பனையாளர்கள் மீண்டும் 5 நாள் வேலை நிறுத்தத்தில் குதித்துள்ளனர்.

அரசியல் ஸ்திரமற்ற நிலைமை. இவ்வாறு பல பிரச்சினைகள். இதனை மக்களால் தாங்கிக்கொள்ள முடியுமா? பொருத்திருந்து பார்ப்போம்.

உரிமை கேட்பது இனவாதமல்ல; அதனை மறுப்பதே இனவாதம்! கிழக்கில் "எழுக தமிழ்'' ஆயத்த முழக்கம்எமது உரிமையை கேட்பது இனவாதமல்ல. அதனை மறுப்பதே இனவாதம். எமது உரிமையை நாமே உரத்துச்சொல்ல எழுக தமிழ் மூலம் ஒன்றிணைவோம் என தமிழ் மக்கள் பேரவையின் இணைத்தலைவர் த.வசந்தராஜா அழைப்பு விடுத்துள்ளார்.

எதிர்வரும் 21 ஆம் திகதி மட்டக்களப்பில் நடைபெறவுள்ள எழுக தமிழ் மக்கள் எழுச்சிபேரணி நிகழ்வு தொடர்பாக மட்டக்களப்பு கூட்டுறவு சங்க மண்டபத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,

தமிழ் மக்கள் பேரவை ஒரு மக்கள் அமைப்பு, தமிழ் பேசும் மக்களின் அரசியல் அபிலாசைகளுக்காகவும் அவர்களது நலன்களுக்காகவும் ஜனநாயக ரீதியாக பாடுபடுவது அதனுடைய முக்கிய பணியாகும்.
எழுக தமிழ் ஊடாக வட கிழக்கு மக்களின் அரசியல் அபிலாசைகளை இந்நாட்டு அரசுக்கும் சர்வதேசத் துக்கும் குறிப்பாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவைக்கும் உரத்துச் சொல்ல முடியும் என்பது தமிழ் மக்கள் பேரவையின் திடமான நம்பிக்கை.

இப்போது தலைவர்களை முந் திக்கொண்டு தீர்மானம் எடுக்கவும் செயற்படவும் மக்கள் முற்படுகின்றனர். ஏனெனில் தலைவர்களுடைய தீர்மானங்களும் செயற்பாடுகளும் தடுமாற்றம் நிறைந்து இருப்பதாக மக்கள் எண்ணுகின்றார்கள் .

எனவே தங்கள் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு தாங்களும் முழுமையான பங்களிப்பைக் செய்ய வேண்டும் என மக்கள் முன்வரத் தொடங்கியுள்ளனர். அதன் வெளிப்பாடுதான் தமிழ் மக்கள் பேரவையின் தோற்ற மும் எழுக தமிழ் பேரணி நிகழ்வும்.

கேட்காமல் எதுவும் கிடைப்பதில்லை, கேட்பது நமது தலையாய கடமை. எங்களுக்கு எது தேவை என்பதை நாம்தான் சொல்லியாக வேண்டும் .அதையும் உரத்துச் சொல்லுதல் வேண்டும் .இதற்கான அரிய சந்தர்ப்பம் ஒன்றுதான் கிழக்கில் மட்டக்களப்பிலே நடை பெறவுள்ள எழுக தமிழ் பேரணி நிகழ்வு.
எனவே அந்த பேரணி நிகழ்வில் இன, மத, கட்சி வேறுபாடுகளை விடுத்து வடக்கு கிழக்கை சேர்ந்த அனைவரும் கலந்து கொள்ளவேண்டும் என தமிழ் மக்கள் பேரவை பகிரங்கமாக அழைப்பு விடுப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.
பனைவள அபிவிருத்தி ஆண்டாக 2017 பிரகடனம்

வடக்கு மாகாண பனைவள அபிவிருத்தி ஆண்டாக இந்த வருடத்தை வடக்கு மாகாண சபை பிர கடனப்படுத்தியுள்ளது. வடக்கு மாகாண சபையின் 82 ஆவது அமர்வு நேற்றைய தினம் அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் தலைமையில் நடைபெற்றது. இதன்போது விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசனால் மேற்படி விடயம் பிரேரணையாக முன்மொழியப்பட்டு நிறைவேற்றப்பட்டது.

வடக்கின் தனித்துவமான இயற்கை தாவரமாகவும், வடக்கில் பொருளாதாரத்தை கட்டியெழுப்பவல்ல வளமாகவும் பனைமரங்கள் உள்ளன. எனினும் வடக்கின் அடையாளமாகவும், வடக்கின் சுற்றுசூழலில் காத்திரமான வகிபாகத்தை கொண்டதாகவும் விளங்குகின்ற பனைமரங்கள் அனுமதியின்றி சட்டவிரோதமாக பெருமளவு அழிக்கப்படுகின்றன.

நுனிக்குருத்து தொடக்கம் அடிவேர் வரை தனது சகல பாகங்களையும் பயனாக தர வல்ல கற்பகதருக்களான இப்பனை மரங்களில் இருந்து இதுவரையில் பொருளாதார ரீதியிலான உச்சப் பயன்பாடு பெறப்படவில்லை. இவற்றை கருத்தில் கொண்டு பனைமரங் களை அழிவிலிருந்து பாதுகாப்பது தொடர்பாகவும் பனைப் பொருளாதாரத்தை மேம்படுத்தும் விதமாகவும் விழிப்புணர்வு நடவடிக்கைகளும் செயற்பாடுகளையும்,

வினைத்திறனுடன் முன்னெடுக்கும் நோக்கில் நடப்பு 2017ஆம் ஆண்டினை வடக்கு மாகாண பனைவள அபிவிருத்தி ஆண்டு என பிரகடனம் செய்வது என இந்த சபை கோருகின்றது. என்ற தீர்மானத்தை விவ சாய அமைச்சர் ஐங்கரநேசன் முன்மொழிந்தார். இதையடுத்து இந்த பிரேரணை எதிர்ப்பின்றி உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது.
       

தமிழ் மக்கள் எதிர்ப்பார்த்தது என்ன...? பிரச்சினைகள் தீர்ந்து விட்டதாகவும் கூறமுடியாது..! சம்பந்தன் விளக்கம்


கடந்த கால ஆட்சியை மாற்றி அமைக்க பாரிய வாக்குகளை எமது மக்கள் இந்த அரசாங்கத்திற்கு வழங்கியிருக்கின்றார்கள்.

அதற்கு காரணம் நாங்களும் இந்த நாட்டில் மற்ற சமூகங்களை போல் மதிக்கப்பட வேண்டும். நாங்களும் எல்லா உரிமைகளும் பெற்றவர்களாக வாழ வேண்டும். எமது சுய மரியாதையும் கௌரவமும் பாதுகாக்கப்பட வேண்டும்.

இந்த விடயங்களை எதிர்பார்த்தே தமது வாக்குகளை வழங்கினார்கள் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதிர்கட்சி தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

தேசிய ஒருங்கிணைப்பு நல்லினக்க அமைச்சின் ஏற்பாட்டில் நல்லிணக்க வாரம் இன்று கொழும்பு விவேகாநந்தா தேசிய கல்லூரியில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

இரண்டு இனங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த தற்பொழுது அரசாங்கம் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. அதனை நாங்கள் வரவேற்கின்றோம்.

இந்த நாட்டில் இருக்கின்ற அனைத்து மக்களும் ஒற்றுமையாக இருக்க வேண்டியது மிகவும் அவசியமான ஒன்றாகும். நாங்களும் அதனையே எதிர்பார்க்கின்றோம்.

சர்வதேசத்தின் மதிப்பை நாம் பெற்றுக்கொள்ள வேண்டுமானால் நாம் அனைவரும் ஒன்றுபட்டு செயற்பட வேண்டும்.

சமாதானத்தை ஏற்படுத்த இந்த நாட்டின் அனைத்து மக்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

எமக்கு பல பிரச்சினைகள் இருக்கின்றன. அதனை நான் ஏற்றுக் கொள்கின்றேன். பிரச்சினைகள் எல்லாம் தீர்ந்துவிட்டதாக நாம் கூற முடியாது. பல பிரச்சினைகள் தீர்க்கப்படாமல் இருக்கின்றன.

ஆட்சி மாற்றத்தின் காரணமாக ஆடசியாளர்கள் மத்தியில் ஒரு மாற்றம் ஏற்பட்டிருக்கின்றது. ஒரு வித்தியாசத்தை நாங்கள் அவதானிக்கின்றோம்.

இந்த பிரச்சினைகளை பல்வேறு சவால்களுக்கு மத்தியில் தீர்ப்பதற்கு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றார்கள். தீர்க்க எத்தனிக்கின்றார்கள்.

பிரச்சினைகள் முழுமையாக தீர்க்கப்படாவிட்டாலும் கூட அதற்கான எமது ஒத்துழைப்பை நாம் வழங்காமல் இருக்க முடியாது. ஏனென்றால் நாங்களும் இதில் ஒரு பங்காளிகள்.

எமக்கு இதில் முக்கிய ஒரு பங்கு இருக்கின்றது. அந்த பங்களிப்பை செய்ய நாம் பின்நிற்க கூடாது. காணாமல் போனோர் தொடர்பாக விரைவில் ஒரு முடிவு வர வேண்டும்.

நீண்ட நாட்களாக இது தொடர்பாக பல போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இது தொடர்பாக சில மாதங்களுக்கு முன்பு பாராளுமன்றத்தில் ஒரு அலுவலகமும் அமைக்கப்பட்டுள்ளது.

அதற்காக உருவாக்கப்பட்ட சட்டம் அமுல்படுத்தப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். எங்கள் மக்களுடைய நியாயமான பிரச்சினைகளுக்கு ஒரு தீர்வு காணப்பட வேண்டும்.

அந்த மக்களுடைய வாழ்ககையில் ஒரு நிம்மதி ஏற்பட வேண்டும். ஒரு சமாதானம் ஏற்பட வேண்டும். அவர்களுடைய மனதில் ஒரு சாந்தி ஏற்பட வேண்டும். அவர்கள் நடந்த உண்மையை அறிய வேண்டும்.

இந்த விடயத்தில் அரசாங்கம் காலத்தை வீணடிக்காது செயற்பட வேண்டும் என நான் கருதுகின்றேன். எமது மக்களுக்கு சொந்தமான காணிகள் இன்னும் கொடுக்கப்படவில்லை.

அவர்களின் விவசாய நிலங்கள் அவர்களுக்கு கையளிக்கப்படவில்லை. இதனால் அவர்கள் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

இந்த விடயங்களில் தற்பொழுது படிப்படியாக முன்னேற்றம் ஏற்படுகின்றது. ஆனால் இன்னும் விரைவுபடுத்தப்பட வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

சமஸ்டி என்றால் பிரிவினை..! சிங்கள மக்களிடம் பொய்களை பரப்பும் அரசியல்வாதிகள் : விக்கி குற்றம்


சமஸ்டி என்றால் பிரிவினை என்று அரசியல்வாதிகள் தவறாக சிங்கள மக்களிடத்தில் பரப்பி வருகின்றார்கள் என வடக்கு முதலமைச்சர் குற்றம் சுமத்தியுள்ளார்.

இரட்டை நகர் உடன்படிக்கை தொடர்பில் கனடாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள வடக்கு மாகாண முதல்வர் சமஷ்டி முறையிலான தீர்வினை அரசாங்கம் நிராகரிக்கும் நிலையில் தமிழர்களின் பிரச்சினைக்குரிய தீர்வு என்ன என்று கேள்வியெழுப்பிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

சமஷ்டி என்றாலே பிரிவினை என்ற தவறான கருத்தினை சிங்கள மக்கள் மத்தியில் தென்னிலங்கை அரசியல்வாதிகள் பரப்பி வருகின்றனர். சமஷ்டி மூலம் ஒரே நாட்டிற்குள் எம்மை நாமே ஆளக்கூடிய நிரந்தர தீர்வு வேண்டும்.

எங்களை பிரிவினைப்படுத்தி பிரபாகரன் என்கிறார்கள் பிரபாகரனுக்கு எதிரானவர்கள் என்கிறார்கள். இவ்வாறு தொடர்ந்தும் எதிர்ப்பு கலாச்சாரத்தில் தான் ஈடுபட்டுள்ளோம். இது போன்ற ஒரு நிலை இனிமேலும் கிடையாது. என தெரிவித்தார்.

மேலும் முல்லைத்தீவு நகரினை அபிவிருத்தி செய்யும் வகையிலும் அங்குள்ள மக்களுக்கு வேலைவாய்ப்பினை ஏற்படுத்தும் நோக்கிலும், கனடாவில் வாழும் தமிழ் தொழில் அதிபர்கள் முதலீடுகளை செய்யும் நோக்குடன் இரட்டை நகர திட்டம் கைசாத்திடப்படவுள்ளது.

கனடாவில் தமிழ் மக்கள் அதிகளவில் வாழும் மார்க்கம் நகரம், மற்றும் முல்லைத்தீவு நகரங்களை இணைக்கும் இரட்டை நகர உடன்படிக்கையை கைச்சாத்திடும் நிகழ்வு எதிர்வரும் தைப் பொங்கல் தினத்தன்று இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

புதிய அரசியலமைப்புக்கான செயற்பாடுகள் தாமதமின்றி முன்னெடுக்கப்பட வேண்டும்! த.தே.கூட்டமைப்பு...


புதிய அரசியலமைப்பினை உருவாக்குவதற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் இத்தருணத்தில் அதனை தாமதமின்றி மேற்கொள்ள வேண்டும். அதற்காக அனைத்து உறுப்பினர்களும் இணைந்துஒத்துழைப்புக்களை வழங்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் புதிய அரசியலமைப்பினை உருவாக்குவதற்காக சந்தர்ப்பமொன்று ஏற்பட்டுள்ளது. அந்த சந்தர்ப்பத்தை குழப்பாது அனைத்து உறுப்பினர்களும் ஒத்துழைப்புக்களை வழங்க வேண்டுமென தலைமை உரையில் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கேட்டுக்கொண்டார்.

புதிய அரசியல் சாசன உருவாக்கம் குறித்து ஆராய்வதற்கான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுக் கூட்டம் நேற்று நடைபெற்றது.

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித்தலைவருமான இரா.சம்பந்தன் தலைமையில் கொழும்பு மார்க்கஸ் பெர்ணாண்டோ மாவத்தையில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரையில் இக்கூட்டம் நடைபெற்றது.

சந்திப்பில் ரெலோ அமைப்பின் தலைவரும், பாராளுமன்றக் குழுக்களின் பிரதிதலைவரும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்காலநாதன் தவிர்ந்த ஏனைய வடக்கு கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அனைத்துப் பாராளுமன்ற உறுப்பினர்களும் பங்கேற்றிருந்தனர்.

எதிர்க்கட்சித்தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தனது தலைமை உரையில்,

தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் புதிய அரசியலமைப்புக்கான பணிகள் குறித்தும் அதில் உள்ள விடயங்கள் தொடர்பிலும் விரிவாக கலந்துரையாடப்படும்.

வழிநடத்தல் குழுவினால் கையாளப்படும் விடயங்கள், உபகுழுக்களின் அறிக்கைகள் தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு காணப்படும் சந்தேககங்கள், அவை தொடர்பாக முன்வைப்பதற்காக பாராளுமன்ற உறுப்பினர்களிடத்தில் காணப்படும் விடயங்கள் குறித்த கருத்துக்களை முன்வைக்கவேண்டும். அது தொடர்பாக விரிவாக கலந்துரையாடல்களில் ஈடுபடமுடியும் என கூறினார்.

அத்தோடு தற்போது சந்தர்ப்பமொன்று ஏற்பட்டிருக்கின்றது. இரண்டு பிரதான கட்சிகளும் இணைந்து ஆட்சியமைத்துள்ளார்கள். அந்த சந்தர்ப்பத்தை நாம் குழப்பாது அதனைச் சரியாக பயன்படுத்த வேண்டுமெனவும் சம்பந்தன் சுட்டிக்காட்டியிருந்தார்.

அதனையடுத்து புதிய அரசியல் சாசன உருவாக்கம் தொடர்பிலான வழிநடத்தல் குழுவில் மேற்கொள்ளப்படும் விடயங்கள் தொடர்பான கலந்துரையாடல் ஆரம்பமானது. மதிய போசனம் வரையில் கலந்துரையாடப்பட்டது.

அதனைத் தொடர்ந்து அமைச்சர் சாகல ரத்நாயக்க தலைமையில் நியமிக்கப்பட்ட தேசிய மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு, பொது ஒழுங்கு மற்றும் பொலிஸ் சட்ட வலுவூட்டல் பற்றிய உபகுழுவின் அறிக்கை, பாராளுமன்ற உறுப்பினர் தருமலிங்கம் சித்தார்த்தன் தலைமையில் நியமிக்கப்பட்ட மத்திய அரசாங்கம் - மாகாண சபைகளுக்கிடையிலான தொடர்பு பற்றிய உபகுழுவின் அறிக்கை, பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்த்தன தலைமையில் நியமிக்கப்பட்ட பொதுநிதி தொடர்பான உபகுழுவின் அறிக்கை, அமைச்சர் மஹிந்த சமரசிங்க தலைமையில் நியமிக்கப்பட்ட அடிப்படை உரிமைகள் தொடர்பான உபகுழுவின் அறிக்கை, அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையில் நியமிக்கப்பட்ட நீதித்துறை தொடர்பான உபகுழுவின் அறிக்கை அமைச்சர் சுசில் பிரேம்ஜெயந் தலைமையில் நியமிக்கப்பட்ட பொதுச்சேவை தொடர்பான உபகுழுவின் அறிக்கை தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

குறித்த முழுநாள் கலந்துரையாடல் நிறைவடைந்த பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும், யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் ஊடகங்களிடத்தில் கருத்து வெளியிடுகையில்,

நாம் இன்றைய தினம்(நேற்று) புதிய அரசியலமைப்புக்கான வழிநடத்தல் குழுவின் செயற்பாடுகள் தொடர்பாகவும் வெளியிடப்பட்டுள்ள உபகுழுக்களின் அறிக்கைகள் தொடர்பாகவும் வெளியிடப்படுவதற்கு தீர்மானிக்கப்பட்டு காலதமாதப்படுத்துள்ள வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை தொடர்பாகவும் வரிவாக ஆராய்ந்திருந்தோம்.

குறிப்பாக இடைக்கால அறிக்கை விரைவாக வெளியிடப்பட்டு புதிய அரசியலமைப்பை உருவாக்கும் செயற்பாடுகள் தாமதமின்றி முன்னெடுக்கப்படவேண்டுமென நாம் கூட்டாக தீர்மானமெடுத்ததோடு அதற்காக அனைவரும் உரிய பணிகளை முன்னெடுப்பதெனவும் இணங்கியுள்ளோம்.

மேலும் ஏழு தசாப்தமாக நீடித்து வரும் தேசியப் பிரச்சினைக்கான தீர்வை மேலும் காலதமாக்கிக் கொண்டு செல்லாது உரிய நியாயமான தீர்வொன்று வழங்கப்படவேண்டும். அதற்காகவே நாம் புதிய அரசியலமைப்பை உருவாக்கும் செயற்பாட்டிற்கு முழுமையான பங்களிப்பை அளித்து வருகின்றோம்.

அதேபோன்று அனைத்து அரசியல் கட்சிகளும் அச்செயற்பாட்டில் முழுமையாக ஈடுபடவேண்டுமென வேண்டுகோள் விடுப்பதோடு ஒத்துழைப்புக்களை வழங்குமாறும் வலியுறுத்துகின்றோம் என்றார்.

உரிமை கேட்பது இனவாதமல்ல; அதனை மறுப்பதே இனவாதம்! கிழக்கில் "எழுக தமிழ்'' ஆயத்த முழக்கம்


எமது உரிமையை கேட்பது இனவாதமல்ல. அதனை மறுப்பதே இனவாதம். எமது உரிமையை நாமே உரத்துச்சொல்ல எழுக தமிழ் மூலம் ஒன்றிணைவோம் என தமிழ் மக்கள் பேரவையின் இணைத்தலைவர் த.வசந்தராஜா அழைப்பு விடுத்துள்ளார்.

எதிர்வரும் 21 ஆம் திகதி மட்டக்களப்பில் நடைபெறவுள்ள  எழுக தமிழ் மக்கள் எழுச்சிபேரணி நிகழ்வு  தொடர்பாக மட்டக்களப்பு கூட்டுறவு சங்க மண்டபத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,

தமிழ் மக்கள் பேரவை ஒரு மக்கள் அமைப்பு, தமிழ் பேசும் மக்களின் அரசியல் அபிலாசைகளுக்காகவும் அவர்களது நலன்களுக்காகவும் ஜனநாயக ரீதியாக பாடுபடுவது அதனுடைய முக்கிய பணியாகும்.
எழுக தமிழ் ஊடாக வட கிழக்கு மக்களின் அரசியல் அபிலாசைகளை இந்நாட்டு அரசுக்கும் சர்வதேசத் துக்கும்  குறிப்பாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவைக்கும் உரத்துச் சொல்ல முடியும் என்பது தமிழ் மக்கள் பேரவையின் திடமான நம்பிக்கை.

இப்போது தலைவர்களை முந் திக்கொண்டு தீர்மானம் எடுக்கவும் செயற்படவும் மக்கள் முற்படுகின்றனர். ஏனெனில் தலைவர்களுடைய தீர்மானங்களும் செயற்பாடுகளும் தடுமாற்றம் நிறைந்து இருப்பதாக மக்கள் எண்ணுகின்றார்கள் .

எனவே தங்கள் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு தாங்களும் முழுமையான பங்களிப்பைக் செய்ய வேண்டும் என மக்கள் முன்வரத் தொடங்கியுள்ளனர். அதன் வெளிப்பாடுதான் தமிழ் மக்கள் பேரவையின் தோற்ற மும் எழுக தமிழ் பேரணி நிகழ்வும்.

கேட்காமல் எதுவும் கிடைப்பதில்லை, கேட்பது நமது தலையாய கடமை. எங்களுக்கு எது தேவை என்பதை நாம்தான் சொல்லியாக வேண்டும் .அதையும் உரத்துச் சொல்லுதல் வேண்டும் .இதற்கான அரிய சந்தர்ப்பம் ஒன்றுதான் கிழக்கில் மட்டக்களப்பிலே நடை பெறவுள்ள எழுக தமிழ் பேரணி நிகழ்வு.

எனவே அந்த பேரணி நிகழ்வில் இன, மத, கட்சி  வேறுபாடுகளை விடுத்து வடக்கு கிழக்கை சேர்ந்த அனைவரும் கலந்து கொள்ளவேண்டும் என தமிழ் மக்கள் பேரவை பகிரங்கமாக அழைப்பு விடுப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.

கனடாவின் சர்வதேச மாநாட்டில் வடமாகாண அமைச்சர்கள்..!


வடகிழக்கு சுகாதாரம் மற்றும் கல்வி அபிவிருத்தி தொடர்பாக கனடாவில் இடம்பெறவுள்ள சர்வதேச மாநாட்டிற்கு வடகிழக்கில் இருந்து வடமாகாண அமைச்சர்கள் உள்ளிட்ட 20 பேர் கொண்ட குழுவினர் எதிர்வரும் வாரமளவில் கனடா நாட்டிற்கு பயணமாகவுள்ளனர்.

15, 16, 17ம் திகதிகளாக 3 நாட்கள் நடைபெறவுள்ள மாநாட்டின் ஆராம்ப நிகழ்வில் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் கலந்து கொள்ளவுள்ள நிலையில், குறித்த விடயம் தொடர்பாக வடமாகாண சுகாதார அமைச்சர் பா.சத்தியலிங்கம் கருத்தது தெரிவிக்கையில்,

வடமாகாண சுகாதார அமைச்சின் வேண்டுதலுக்கு அமைய கனடாவில் உள்ள பல அமைப்புக்கள் மற்றும் மருத்துவர்கள் சார்ந்த அமைப்புக்கள் இணைந்து வடக்கு, கிழக்கு மகாணங்களின் சுகாதாரம் மற்றும் கல்வி அபிவிருத்தி தொடர்பான சர்வதேச மாநாடு ஒன்றினை எதிர்வரும் 15, 16, 17ம் திகதிகளில் ஏற்பாடு செய்துள்ளனர்.

வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் எதிர்கால திட்டங்கள் தொடர்பாக 3 ஆண்டுகள் மூலோபாயத்திட்டம் ஒன்றை நாம் தயாரித்திருந்தோம். அத் திட்டம் 2016ம் ஆண்டு யூன் மாதம் நடைமுறைக்கு வந்துள்ளது.

குறித்த திட்டத்தை நடைமுறைப்படுத்துவதாக இருந்தால் மனித வளம், நிதி வளம் மற்றும் ஆலோசனை என பல விடயங்கள் தேவை. அத்துடன் சுகாதாரம் தொடர்பான அபிவிருத்திக்கு கல்வி அமைச்சின் பாரிய பங்கும் உள்ளது.

வடமாகாணத்தில் உள்ள போரின் பாதிப்புக்கள் உள்ளிட்ட அத்தனை பிரச்சினைகளும் கிழக்கு மாகாணத்திலும் காணப்படுவதால் வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கான சுகாதாரம் மற்றும் கல்வி அபிவிருத்தி தொடர்பான சர்வதேச மாநாடாக இதை நடாத்துவதற்கு திட்டமிட்டுள்ளோம்.

இந்த மாநாட்டில் வடக்கு மாகாணத்தின் சுகாதாரம் மற்றும் கல்வி அமைச்சர்கள் உள்ளிட்ட அந்த அமைச்சுக்களின் செயலாளர்கள், யாழ் பல்கலைக்கழகத்தில் உள்ள பேராசிரியர்கள், யாழ். போதனா வைத்தியசாலை வைத்திய நிபுணர்கள், கிழக்கு மாகாணத்தின் சுகாதாரம் மற்றும் கல்வி அமைச்சின் அதிகாரிகள், மாகாண சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட 20 பேர் கொண்ட குழுவினர் கலந்து கொள்ளவுள்ளனர்.

கனடா, ஐக்கிய இராச்சியம், அமெரிக்கா, அவுஸ்திரேலியா, நோர்வே போன்ற நாடுகளில் இருந்து துறை சார் நிபுணர்கள், நிதி வழங்கும் அமைப்பின் பிரதிநிதிகள், பல்கலைக்கழகங்களின் பிரதிநிதிகள் பங்குபற்றவுள்ளார்கள்.

குறிப்பாக வெளிநாட்டு பண உதவி மத்திய அரசின் ஊடாகத்தான் மாகாணத்துக்கு கிடைக்கும் என்ற சட்ட ஏற்பாடு காணப்படுகிறது.

எனவே இந்த விடயத்தில் வெளிப்படைத்தன்மை கருதி மத்திய அரசின் பிரதிநிதிகளையும் இந்த மாநாட்டுக்கு அழைப்பதாக இருந்த போதிலும் குறுகிய நாள் ஏற்பாடாக இருந்தபடியால் அதை செயற்படுத்தவில்லை.

இது தொடர்ச்சியான மாநாடாக உள்ள காரணத்தால் இந்த வருட இறுதியில் இலங்கையில் நடைபெறவுள்ள மாநாட்டில் அவர்களை இணைக்கவுள்ளோம்.

இந்த மாநாட்டின் மூலம் வடகிழக்கு மாகாண அபிவிருத்தி செயற்பாடுகள் எவ்வாறு மேற்கொள்ள முடியும் என்றும் அவற்றை எந்த முறையில் வெற்றிகரமாக கொண்டு செல்ல முடியும் என்றும் பல திட்டங்களை அறிந்து கொள்ள முடியும் என எதிர்பார்க்கிறோம்.

அத்துடன் எமது திட்டங்களை மெருகூட்டுவதும் முன்னேற்றுவதற்கான நிதி மனித வலுவை கொண்டு வருதல், மேலதிக பயிற்சி ஆராய்ச்சி தொடர்பான விடயங்கள் எதிர்கால அபிவிருத்திக்கு வழிவகுக்கும் காரணிகள் தொடர்பாகவும் 16, 17ம் திகதிகளில் ஆராயவுள்ளோம்.

இந்த மாநாட்டில் கலந்து கொள்ளவுள்ள வட கிழக்கில் உள்ள பிரதிநிதிகள் 14ம் திகதிக்கு முன்னர் கனடா நாட்டுக்கு பயணமாகவுள்ளனர் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.ஒன்பதரை கோடி செங்கற்களால் கட்டப்பட்ட இலங்கையின் இரும்புக் கோட்டை! எகிப்திய பிரமிட்டுக்கு இணையான சாதனை!


ஆயிரக்கணக்கில் செங்கற்களை பயன்படுத்தி கட்டப்பட்ட மாளிகைகளை பார்த்திருப்போம், லட்சக்கணக்கில் கற்களை கொண்டு கட்டப்பட்ட கட்டடங்களைப் பற்றி கேள்விப்பட்டிருப்போம். ஆனால் ஒரு கோடியல்ல இரண்டு கோடியல்ல ஒன்பதரை கோடி செங்கற்களை பயன்படுத்தி கட்டப்பட்ட கோட்டையை பற்றி தெரியுமா?

அதுவும் இலங்கையில் இவ்வாறான ஒரு கோட்டை உருவாக்கப்பட்டிருக்கின்றது என்றால் நம்ப முடிகிறதா? நம்பித்தான் ஆக வேண்டும். ஆம் ஒன்பதரை கோடி செங்கற்களால் கட்டப்பட்ட உலகின் முதலாவது கட்டிடம் இலங்கையில் உருவாக்கப்பட்ட ஜேதவனராமய விகாரை.

இலங்கையின் இரும்புக்கோட்டை எனவும் வர்ணிக்கப்படுகிறது

கி.மு 276 - 303 காலப்பகுதியில் இலங்கையை ஆட்சி செய்த மகாசேன மன்னனால் இத்தூபி நிர்மாணிக்கப்பட்டது இத்தூபி அமைந்துள்ள பகுதியில் அதற்கு அண்மித்ததாக பொருளாதார நடவடிக்கைகளுக்கான கட்டடத்தொகுதியொன்றும் அமைக்கப் பட்டிருந்ததால் இதற்கு இணைந்த பெயராக ஜேதவனராமய தூபி என்ற பெயர் வந்ததாகவும் கருதப்படுகின்றது.சிறப்புக்காரணி


8 ஏக்கர் நிலப்பரப்பில் நிர்மாணிக்கபட்டிருக்கும் அதன் அமைவு விட்டத்தில் இருந்து நுணிவரை மேல் நோக்கியதாக 430 அடி வரை உயரம் கொண்டதாக இருக்கின்றது.

அன்றைய காலப்பகுதியல் இந்நாட்டில் நிலவிய கட்டடக்கலை நிர்மாணம் மற்றும் அதற்குரிய செங்கற்கள் போன்ற மூலப்பொருட்கள் பயன்படுத்தப்பட்டுள்ளமையானது அக்காலத்தில் உயர்நிலையில் காணப்பட்ட தொழில்நுட்பத்தை எடுத்து காட்டுகின்றது.

வரலாற்றுடன் ஒப்பிட்டு நோக்கும் போது இந்த தூபி என்ன காரணத்தின் அடிப்படையில் நிர்மாணிக்கப்பட்டது என்பது இன்று வரை புரியாத புதிராகவே காணப்படுகின்றது.

எனினும் சில தூபிகள் புத்தரின் புனித தந்தம்( உடல் பாகங்கள்) வைக்கப்பட்டு நிர்மாணிக்கப்பட்டுள்ளன. இந்நாட்டில் புத்தரின் புனித தந்தமான உடலபகுதி( எலும்பு கூடு அல்லது அஸ்தி) வைக்கப்பட்டு நிர்மாணிக்கப்பட்டதாக குறிப்புக்களும் அடையாளப்படுத்துகின்றன.

அத்தோடு அக்கால முக்கிய நிகழ்வுகள் அல்லது அப்பிரதேசத்திற்குரிய சிறப்புக்களை அடிப்படையாகக் கொண்டு இவ்வாறு தூபிகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. இத்தூபிக்கு அண்மையில் இதேபோன்றதொரு பிரமாண்டமான தூபி நிர்மாணிக்கப்பட்டுள்ளது ஆச்சரியத்திற்குரிய விடயமாகும்.

மஹிந்த தேரர் நினைவாக

மஹிந்த தேரரின் இலங்கை விஜயத்தின் போது அவர் இங்கு பரிநிர்வாரணம் (மரணம்) அடைந்தபோது அவரின் உடல் திஸ்ஸ மகாராமவுக்கு கிழக்காக உள்ள இடம் ஒன்றில் அடக்கம் செய்யப்பட்டதாக தீபவம்சத்தில் குறிப்புகள் காணப்படுகின்றன.

அதனால் இந்த ஜேதவனராம தூபி மஹிந்த தேரரின் உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் நிர்மாணிக்கப்பட்டிருக்கலாம் என்றும் வரலாற்றாசிரியர்கள் ஊகிக்கின்றனர்.

இதுபற்றி மகாவம்சம் குறிப்பிடுகையில் அவரின் உடல் ருவன்வெளிசாயவுக்கு இடப்பக்கமாக அடக்கம் செய்யப்பட்டதாக கூறுகின்றது.

ஆயினும் இந்த ஜேதவனராம பகுதியில் திருகோண முக்கோண கலாசாரத் திட்டத்தின் கீழ் அகழ்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதன்போது இந்த தூபியின் தெற்காக மூன்று அடி ஆழத்திற்கு அகழ்வுகள் மேற்கொள்ளப்பட்ட போது அங்கு சில எச்சங்களும் நிலக்கரி படிமங்களும் கண்டுபிடிக்கப்பட்டன.

இதன்மூலம் மஹிந்த தேரரின் உடல் எரிக்கப்பட்ட இடமாக அந்த இடம் இருக்கலாம் என்றும் எவ்வாறாயினும் ஜேதவனராம தூபி அமைந்திருப்பது அநுராதபுரத்தில் மன்னராட்சி நிலவியதும் பௌத்தத்தின் வளர்ச்சி மற்றும் வரலாற்று மூலாதாரங்களாக கருதப்படும் கட்டடங்கள் அழிவுற்று மீதம் உள்ள எச்சங்கள் அமைந்துள்ள பிரதேசத்திலுமாகும். அத்துடன் ஜோதிவனம் என்ற நிலப்பரப்பிலுமாகும் .

இந்தக்காரணத்தால் ஜேதவன என்ற பெயர் வந்திருக்ககூடும் என்று கருதப்படகின்றது. கி.மு மூன்றாம் நூற்றாண்டில் இந்த தூபி நிர்மாணிக்கப்பட்டிருப்பதோடு மஹிந்த தேரரின் மறைவும் அந்த வருடமே நிகழ்ந்திருப்பதாக வரலாற்றாசிரியர்கள் கூறுகின்றனர்.பெருமளவான நிலப்பரப்பில் கட்டடங்கள்

ஜேதவனராம அமைந்துள்ள பகுதியில் மேலும் பல கட்டடங்கள் உள்ளன.

பிக்குமார்கள் தங்கும் விடுதிகள்,தானம் வழங்கும் மண்டபம் வழிபாட்டுத்தளம் போதனை மண்டபம் என்பனவும் அமைந்துள்ளன.

அத்தோடு பக்தர்களுக்கான ஓய்வு மண்டபம் கூட்டம் கூடும் மண்டபம் என்பனவும் தொடர் கட்டங்களாக அமைக்கப்பட்டுள்ளன.

ஜேதவன தூபிக்கு அண்மையில் உள்ள கட்டடங்கள் 9ஆம், 10ஆம் நிர்மாணிக்கபட்டதாகவும் காணப்படுகின்றது.

4ஆம் நூற்றாண்டில் உரோமப்போர் வீழ்ச்சி கண்ட போது உலகில் உள்ள மிக உயரமான கட்டடமாகவும் தூபியாகவும் இது இருந்தது.

அத்தோடு எகிப்தில் பிரமிட்டுகளுக்கு அடுத்ததாக சிறப்பு இந்த தூபிக்கு இருக்கின்றது. இந்த ஜேதவனராமய தூபியை நிர்மாணிப்பதற்கு 9 கோடி 33 லட்சம் செங்கற்கள் பயன்படுத்தப்பட்டிருப்பதாகவும் கணிப்பிடப்பட்டிருக்கின்றன.


யுத்தக்குற்ற விசாரணையில் திருப்பம்...! ஏற்க மறுக்கும் இலங்கை..! ஏமாறப் போகும் தமிழர்கள்..?


இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் யுத்தக்குற்றம் தொடர்பிலான விசாரணைகளுக்கு கலப்பு நீதிமன்றம் அமைக்கப்பட வேண்டும் என பரிந்துரை வழங்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு அரசாங்கத்தினால் ஏற்படுத்தப்பட்ட நல்லிணக்கப் பொறிமுறை தொடர்பான ஆலோசனை செயலணி இலங்கை அரசாங்கத்துக்கு இந்த பரிந்துரைகளை வழங்கியுள்ளது.

மனோரி முத்தெட்டுவேகம தலைமையில் அமைக்கப்பட்டிருந்த இந்த குழுவினர் கடந்த ஒரு வருடமாக வடக்கு மற்றும் கிழக்கு உள்ளிட்ட பகுதிகளில் மக்களின் ஆலோசனைகளை பெற்றுக்கொண்டது.

அந்த வகையில் குறித்த குழுவின் இறுதி பரிந்துரைகள் அடங்கிய அறிக்கை கடந்த செவ்வாய்கிழமை தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்க அலுவலகத்தின் தலைவர் சந்திரிகா பண்டாரநாயக குமாரதுங்கவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையிலேயே மேற்குறித்த விடயங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

யுத்தக் குற்றங்கள் மற்றும் மனித குலத்துக்கு எதிரான சர்வதேச குற்றங்கள், குற்றவியல் குற்றங்களாக கருதப்படும் வகையில் இலங்கை சட்டங்களில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படவேண்டும்.

மேலும், மக்களிடம் மேற்கொள்ளப்பட்ட ஆலோசனையின் மூலம் அரசின் மீதும், அரசு இயந்திரங்கள் மீதும் மக்களுக்கு நம்பிக்கையற்ற தன்மை காணப்படுவதாக அந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

வடக்கு மற்றும் கிழக்கு பகுதியில் உள்ள மக்கள் உள்நாட்டு விசாரணை நம்பிக்கைக்குரியதாக இருக்காது என்ற ரீதியில் தீவிரமாக கருத்துக்களை முன்வைத்திருப்பதாக கூறப்பட்டுள்ளது.

எனினும், ஏனையப் பகுதிகளிலும், படையினரிடமும் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது சர்வதேச விசாரணைகளுக்கு கடும் எதிர்ப்பு தெரிவிப்பதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

யுத்தக் குற்றம், மனித குலத்திற்கு எதிரான சர்வதேச சட்டங்களை மீறிய குற்றம், சித்திரவதைகள், நபர்கள் காணாமல் ஆக்கப்பட்டமை, பாலியல் வல்லுறவு போன்ற குற்றங்கள் மிக மோசமான மனித உரிமை மீறல் குற்றங்களாகும்.

எனவே, இவ்வாறான குற்றங்களுக்கு மன்னிப்பளிப்பது சட்டவிரோதமானதாகும் என அந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், சர்வதேச மனித உரிமைகள் பேரவையில் இலங்கையின் அனுசரணையுடன் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானத்திற்கு இலங்கை ஒப்புதல் வழங்கியுள்ளமையும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதேவேளை, குறித்த விடயம் தொடர்பில் சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவித்துள்ள, நல்லிணக்கப் பொறிமுறை தொடர்பான ஆலோசனை செயலணி உறுப்பினர் பேராசிரியர் சித்ரலேகா மெளனகுரு இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை அரசாங்கம் தனது வாக்குறுதியில் இருந்து பின்வாங்க கூடாது. அத்துடன், கலப்பு நீதிமன்ற பொறிமுறையையே தாங்கள் பரிந்துரை செய்துள்ளோம்.

எனினும், சர்வதேச நீதிபதிகள் நியமனம் தொடர்பான பரிந்துரைகளை அரச தரப்பு ஏற்க மறுத்துள்ளதாக தெரிவித்துள்ள அவர் இது குறித்து தங்களுக்கு அதிகாரப்பூர்வமாக எந்தத் தகவலும் இல்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இறுதி யுத்தத்தில் இராணுவத்திடம் சரணடைந்து காணாமல் போனோர் பற்றி எவ்வித தகவலும் இல்லை! நீதிமன்றில் இராணுவ அதிகாரி பல்டிவன்னியில் நடந்த இறுதி யுத்தம் முடிவடைந்த போது இராணுவத்தினரிடம் சரணடைந்து காணாமல் போனவர்கள் தொடர்பில் தகவல் தெரியும் என முன்பு நீதிமன்றில் சாட்சியம் அளித்த இராணுவ அதிகாரி ஒருவர் நேற்று நடைபெற்ற வழக்கு விசாரணையில் அது பற்றி தனக்கு எதுவும் தெரியாது என தெரிவித்திருக்கின்றார்.

அரசாங்கத்தின் அழைப்பை ஏற்று இராணுவத்தினரிடம் சரணடைந்த விடுதலைப்புலி உறுப்பினர்களில் ஒருவராகிய நடேசு முரளிதரன், அவருடைய மனைவி ஜெயக்குமாரி, அவர்களுடைய ஐந்து வயதான தாருஷன், இரண்டு வயதான அபித்தா ஆகிய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் காணாமல் போயிருப்பது தொடர்பான விசாரணை முல்லைத்தீவு நீதிமன்றத்தில், நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இந்த விசாரணையின்போது சாட் சியமளித்த ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி மேஜர் ஜெனரல் சாணக்க குணவர்தன என்பவரே காணாமல் போனவர்கள் தொடர்பில் தனக்கு எதுவும் தெரியாது எனத் தெரிவித்தி ருக்கின்றார்.ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் காணாமல் போயிருப்பது தொடர்பில் கந்தசாமி பொன்னம்மா இந்த ஆட்கொணர்வு மனு வழக்கைத் தாக்கல் செய்திருந்தார்.

முன்னைய குறுக்கு விசாரணையொன்றின் போது, இராணுவத்தினரிடம் இறுதி யுத்தத்தின்போது சரணடைந்தவர்கள் பற்றிய விவரப்பதிவுப் பட்டியல் இராணுவத்தினரிடம் இருப்பதாகத் தெரிவித்திருந்த மேஜர் ஜெனரல் சாணக்க குணவர்தனவை அந்த ஆவணத்தை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு முல்லைத்தீவு மாவட்ட நீதவான் உத்தரவிட்டிருந்தார்.

ஆயினும் ராணுவத்தினரிடம் சரணடைந்து புனர்வாழ்வுப் பயிற்சியின் பின்னர் விடுதலை செய்யப்பட்டுள்ள 11 ஆயிரம் பேர் கொண்ட பெயர்ப்பட்டியலையே அவர் சமர்ப்பித்திருந்தார்.
நீதிமன்றம் கோரியிருந்த ஆவணத்திற்குப் பதிலாக இந்த ஆவணம் சமர்ப்பிக்கப்பட்டதை ஏற்றுக்கொள்ள முடியாது என ஆட்சேபம் தெரிவித்திருந்த வழக்காளிகள் தரப்பில் முன்னிலையாகியிருந்த சட்டத்தரணி கே.எஸ்.ரட்னவேல், 2009 ஆம் ஆண்டு மே மாதம் யுத்தம் முடிவடைந்ததையடுத்து, இராணுவத்தினரிடம் சரணடைந்த விடுதலைப்புலி உறுப்பினர்கள் பற்றி கேள்வி எழுப்பியிருந்தார்.
இந்த நிலையிலேயே காணாமல் போனோர் தொடர்பில் தனக்கு எதுவும் தெரியாது என குறித்த இராணுவ அதிகாரி தெரிவித்துள்ளனர்.

இதன்போது இந்த வழக்கு வரும் 30 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது,
விடுதலைப்புலிகளின் திருகோணமலை மாவட்ட அரசியல்துறை பொறுப்பாளரராக இருந்த எழிலன் என்றழைக்கப்படும் சின்னத்துரை சசிதரனின் மனைவி வட மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன், கிரு ஸ்ணகுமார் ஜெயக்குமாரி, விஸ்வநாதன் பாலநந்தினி, கந்தசாமி காந்தி, கந்தசாமி பொன்னம்மா ஆகியோர் இந்த ஆட்கொணர்வு மனு வழக்குகளைத் தாக்கல் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.  
   

Photos